பக்கம்:அடி மனம்.pdf/41

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



லிபிடோ


பாலுணர்ச்சியை பிராய்டு லிபிடோ என்று குறிப்பிட்டாரென்று முன்பே அறிவோம். பாலுணர்ச்சி என்ற தொடரை ஆண் பெண் உடலுறவை நாடி ஏற்படுகின்ற தூண்டுதல் என்ற குறுகிய பொருளில் பிராய்டு வழங்கவில்லை. அதற்கு இன்னும் விரிவான பொருளை அவர் கொடுத்தார். அதை உணர்ந்து கொள்ளாமலேயே பலர் அவருடைய கொள்கையை எதிர்த்தனர். லிபிடோ என்பது வெறும் கல்வி உணர்ச்சியல்ல; அது ஒருவன் அல்லது ஒருத்தியின் அன்பு வாழ்க்கையைக் குறிக்கிறது என்று பிராய்டு கூறுகிறார். அன்பு வாழ்க்கை என்பதில் உடல் சம்பந்தமான இன்பமும் அடங்கி யிருந்தாலும் அது அந்த இன்பத்தோடு முடிந்து விடுவதல்ல.

இவ்வகையான பரந்த பொருளில்தான் பாலுணர்ச்சியைக் கொள்ள வேண்டும். குழந்தைகளிடமும் இப்பாலுணர்ச்சி யிருக்கின்றது என்கிற போதும் இப் பரந்த பொருளை மறந்து விடக்கூடாது.

ஒருத்தி தனது மணவாழ்க்கையிலே அதிகமான அன்பு காண முடியவில்லை. அவளுக்கு ஒரு குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையால் அவளுடைய அன்பு வாழ்வு மலர்ச்சியடைந்தது. அவள் ஒருவிதமான கோளாறு மின்றி வாழ்க்கையை நடத்தி வந்தாள். ஆனால் அந்தக் குழந்தை நோய் கண்டு இறந்து விட்டது. அவளுடைய அன்பு வாழ்வு வறண்டுவிட்டது. விரைவிலே அவளிடத்தில் நரம்பு மண்டலக் கோளாறுகள் தோன்றலாயின.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடி_மனம்.pdf/41&oldid=1005300" இலிருந்து மீள்விக்கப்பட்டது