பக்கம்:அடி மனம்.pdf/80

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கனவு

75

வேண்டும் என்றும் பிராய்டு வற்புறுத்துவதைச் சில உளவியல் அறிஞர்கள் ஒப்புக் கொள்ளுவதில்லை. இருந்தாலும் பொதுப்படையாகப் பார்க்கும்போது பிராய்டின் சித்தாந்தம் ஒரு முக்கியமான உண்மையை வெளிப்படுத்தியுள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது.

கனவைப் பகுத்துப் பார்த்து அதற்கு விளக்கம் கூறுவது மிக நுட்பமான காரியம். விஞ்ஞானப் பரி சோதனைக் கூடத்திலே பெளதிகம் ரசாயனம் முதலிய துறைகளிலே ஆராய்ச்சி செய்வது போலத் திட்டமான முறைகளிலே கனவை ஆராய்வதென்பது சாத்தியமில்லை. இன்ன கனவுக்கு இன்ன பொருள் என்றும் முன்கூட்டியே சூத்திரங்கள் உண்டாக்கி விட முடியாது. “ஒரே கனவு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறு பொருள் கொண்டிருக்கும்; ஒரே மாதிரியான கனவை வேறு வேறு மனிதர்கள் கண்டால் அப்பொழுதும் அம் மனிதர்களின் மனப்பாங்குக்கு ஏற்ப அதற்கு வெவ்வேறு பொருள் இருக்கும்” என்று பிராய்டு கூறியிருக்கிறார்.

ஆதலால் கனவைப் பகுத்து அதன் காரணத்தையும் அது குறிக்கும் பொருளையும் அறிவதற்கு நுட்பமான திறமையும் அநுபவமும் வேண்டும். மேலும் கனவைப் பகுத்து ஆராய்வதோடு ஒருவனுடைய நடத்தையையும் கவனிக்க வேண்டும். தடையில் தொடர் முறையாலும் அவன் மனத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்யும்போது ஒவ்வொரு வகையான சோதனையும் மற்றவற்றிற்கு உதவியாக நின்று அவன் மனத்தில் மறைந்துள்ள உந்தலை அல்லது இச்சையை அறிவதற்குக் காரணமாகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடி_மனம்.pdf/80&oldid=1005356" இலிருந்து மீள்விக்கப்பட்டது