பக்கம்:அடுநெய் ஆவுதி.pdf/15

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர்தம் பொன்னுரை கேட்டும், மன்னன் மறணவர்வு மங்கிற்றிலது; அதுகண்டார் புலவர்; கல்விச் செல்வத்தையும், கேள்விச்செல்வத்தையும், ஒருவர் எவ்வளவுதான் சிறக்கப் பெற்றாலும், கல்வியாலும், செல்வத்தாலும் உளவாகும் இவ்வுலக இன்பம், இறவாப்பேரின்பம் பயக்கவல்லதாகத் தோன்றினும், இறுதியில் அழியக் கூடியதே; ஆகவே, நிலையிலா அவற்றைத் துணையாக்கொண்டு, நிலைபேறுடைய பெருநிலையைப் பெறுதல் வேண்டும் என்ற உணர்வு வரப்பெற்றால்லது, அவர் உள்ளத்தில், பிறர் உரைக்கும் அறவுரைகள் சென்று புகா, என்ற உள்ளத்தின் இயல்பை உணர்ந்தவர் பாலைக்கௌதமனார். அதனால், செல்வம் நிலையற்றது, இளமை நிலையற்றது, யாக்கை நிலையற்றது என நிலையாமை உணர்வினை அவன் உள்ளத்தில் புகுத்த விரும்பினார்; ஆனால், அதை, அவர் அப்போதே செய்துமுடித்தார் அல்லர்; அரசப்பெருவாழ்வில் வாழ்ந்து பழகிய ஒருவர் உள்ளத்தில், நிலையாமை உணர்வை நினைத்தபோதே, புகுத்திவிடுதல் இயலாது; அதை ஏற்கும் வகையில், அவ்வுள்ளத்தைப் பக்குவப் படுத்தியபின்னரே அதைச் செய்தல் வேண்டும் என்றும் அறிந்தார்; அதனால், பல்யானைச் செல்கெழுகுட்டுவனைப் பயந்த, சேரர் குடியில் பிறந்து பாராண்ட அவன் முன்னோர் பெருமையை, அவன் மனம் உவக்கும் வகையில் உரைக்கத் தொடங்கினார்; "பல்யானைச் செல்கெழுகுட்டுவ! நின்குடி முதல்வர் கோலோச்சிய காலத்தில், நாடு நால்வேறு நலங்களையும் நனிமிகப் பெற்றுத் திகழ்ந்தது; காடென்றும் கடல் என்றும் கழித்து ஒதுக்கத்தக்க நிலப்பகுதிகளும், நிறை பயன் அளித்தன. நாட்டுமக்கள் ஒருவரை ஒருவர் துன்புறுத்துவது மறந்து, துணைவர்களாய் வாழ்ந்தார்கள். பிறர் பொருள் அவாவும் பீடின்மை, அவர்பால் பொருந்தாதாயிற்று; ஐயமறக்கற்றுத்தெளிந்த அறிவுடையராய் விளங்கினர்; காதலித்து கடிமணம்கொண்ட மனைவியரை

5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடுநெய்_ஆவுதி.pdf/15&oldid=1318821" இலிருந்து மீள்விக்கப்பட்டது