பக்கம்:அட்லாண்டிக் பெருங்கடல்.pdf/23

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

13

இத்திட்டத்தின் பரிசைப் பெற ஹேரி காக்கர், மெக்கன்சி கிரீவ் ஆகிய இரு விமானிகள் இறங்காமல் அட்லாண்டிக்கைக் கடக்க முயன்றனர்; முடியவில்லை. குளிர் நீர்த் தொல்லையினால் விமானம் அயர்லாந்திற்கு 100 மைல்களுக்கு அப்பால் இறங்க நேர்ந்தது. திட்டமிட்டபடி இறங்காமல், அவர்கள் பறந்து சென்று அட்லாண்டிக்கைக் கடக்க முடியவில்லை. இருவரும் விமானப் படைப் பதக்கத்தைப் பெற்றனர்.

கேப்டன் ஜான் ஆல்காக், லெப்டினண்ட் ஆர்தர் ஒயிட் பிரவுன் ஆகிய இருவரும் விமானத்தில், இறங்காமல் அட்லாண்டிக்கைக் கடந்தனர். பயணத்திற்கு 15 மணி ஆயிற்று; கடந்த தொலைவு 1,890 மைல். இது ஓர் உலகக் குறிப்பே. இருவருக்கும் வீரர் பட்டம் அளிக்கப் பட்டது.

1919 இல் முதல் பிரிட்டிஷ் வானக் கப்பல் 30 பேரை ஏற்றிக் கொண்டு அட்லாண்டிக்கைக் கடந்தது; நியூயார்க்கை அடைந்தது. பயணத்திற்கு 5 நாட்கள் ஆயிற்று. செல்லும் பொழுது 3,600 மைல்களை ஒரு மணிக்கு 33 மைல் விதத்தில் பறந்து சென்றது. திரும்பும் பொழுது 3,800 மைல்களை ஒரு மணிக்கு 50 மைல் வீதம் கடந்து வந்தது.

1924 இல் இரு அமெரிக்க விமானங்கள் ஐஸ்லாந்து, கிரீன்லாந்து வழியாக இங்கிலாந்திலிருந்து கனடாவிற்குப் பறந்து சென்றன. இதைத் தொடர்ந்து ஜெர்மன் விமானம் ஒன்றும் அட்லாண்டிக் வழியாகப் பறந்து சென்றது.