பக்கம்:அட்லாண்டிக் பெருங்கடல்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



8. அட்லாண்டிக் வழிகள்

கடல் வழிகள்

கடல் வழிகளில் மிகப் பெரியது வட அட்லாண்டிக் வழியாகும். இது வட மேற்கு ஐரோப்பாவிற்கும் வட அமெரிக்காவிற்கும் இடையிலுள்ளது. மேற்கூறிய இரு பகுதிகளிலும் தொழிற்சாலைகளும்; மக்களும் அதிகமாக உள்ளனர்.

அட்லாண்டிக் வழியின் அமெரிக்க முனை பல கிளைகளை உடையது. ஏற்றப்படும் சரக்குகளில் பெரும்பகுதி நியூயார்க், பிலடெல்பியா, பால்டிமோர் முதலிய இடங்களுக்குச் செல்கின்றன. வாணிபப் பொருள்கள் மரம், மரக்கூழ், கோதுமை, இறைச்சி, இரும்புத்தாது முதலியவை ஆகும். இவை கிழக்கு, நோக்கிச் செல்பவை.

கிழக்கு வட அமெரிக்கா, வடமேற்கு ஐரோப்பா உற்பத்திப் பொருள்களை உண்டாக்குபவை. ஆகவே, உற்பத்திப் பொருள்களின் வாணிபம் குறைவு. உணவு, மற்றக் கச்சாப் பொருள்களின் வாணிபம் அதிகம். அன்றியும், கிழக்கு நோக்கிச் செல்லும் சரக்குகளை விட மேற்கு நோக்கிச் செல்லும் சரக்குகள் குறைவு. வட அட்லாண்டிக் வழியில் பயணிகளின் போக்கு வரத்து அதிகம். மற்றக் கடல் வழியைக் காட்டிலும், இவ்வழியாக அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு, ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளின் கப்பல்கள் செல்கின்றன.