பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணியறுபது

15

 வையம் நலமுறச் செய்யும் எவ்வகையான செயலும் தெய்வ வழிபாடே. சீவ இதம் தேவ மதம்.

வரு பொருள்

அணியறுப திந்நூல் அளித்தேன் உலகம்
அணியுறுமென் றெண்ணியதற்கு--மணியறுப
தாயிரம்தந் தின்பம் அருளினாய் மால்வெள்ளைத்
தாயறிந் தின்பமுறத் தான்.

(3)

இ-ள்.

அணி அறுபது என்னும் பேரினையுடைய இந்த அழகிய நூலை உலக மாந்தர் உவந்து பயின்று உயர்ந்து திகழ்வர் என்று கருதி அளித்தேன்: இதற்கு அறுபதினாயிரம் அரிய மணிகளைக் கலா தெய்வம் மகிழ்ந்தருள முருகப் பெருமான் விழைந்து அருளினார். பெற்ற பேறுகள் மற்றவரும் அறியப் பேச நேர்ந்தன.

இந்நூலை இயற்றியதனால் எய்தியுள்ள பலனை இஃது உணர்த்தியுளது. இந்த இனிய நூலை ஒதியுணர்ந்து ஒழுகி வருபவர் விழுமிய மேன்மைகளை மேவி விளங்குவர் என்பது விளங்கி நின்றது.

பொன் மணிகளால் ஆய அணிகள் உடலுக்கு அழகு செய்யும்; எண்ணம் உணர்வுகளால் ஆய இந்த அணிகள் உயிர்க்கு இனிய அழகு அருளும்.

சீவர்கள் மேன்மையாய்ச் சிறந்து வாழும் வழிகளை இந்நூல் எழிலுற விளக்கியிருக்கிறது. அவ்வுண்மையை அணி என்னும் சொல் இனிது துலக்கியுளது. வாழ்வு அழகுறின் மனிதன் மாண்புறுகிறான்.