பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

அணியறுபது


வீட்டுக்கு உரிய அழகை இது விளக்கியுளது. இந்தப் பாட்டில் படிந்துள்ள பண்புகளையும் அன்பு நிலைகளையும் நன்கு சிந்தித்துக் கொள்ளுக.

எந்த வீட்டில் எந்த நாட்டில் பெண்கள் இனியராய்ப் புனிதராய் மனம் மகிழ்ந்து வாழ்ந்து வருகின்றனரோ, அந்த வீடும் அந்த நாடும் அதிசய வளங்களுடையனவாய்த் துதிகொண்டு துலங்கி வரும்.

தண்மதி வானத்தை விளக்கி வருகிறது; நன் மக்கள் தம் குலத்தை விளக்கி வருகின்றனர். நன் புதல்வர் என்றது புன்புதல்வரைப் புறத்தே விலக்க வந்தது. பிறந்தவர்கள் எல்லாரும் பிள்ளைகள் அல்லர்; சிறந்த குண நலன்கள் வாய்ந்தவரே உயர்ந்த மக்களாய் எங்கும் ஒளிமிகுந்து உள்ளனர்.

செல்=மேகம். எங்கும் பரந்து சென்று மழை பொழிவது என்னும் காரணத்தைக் கருதிக் காண நேர்ந்தது. மாரிபோல் கைம்மாறு கருதாமல் வள்ளல்கள் வாரி வழங்குவது இயல்பு ஆதலால் ஈண்டு இனமாய் இனைந்து அவர் எண்ணி யுணர வந்தனர்.

உள்ளி உள்ளவெல் லாம் உவந்து ஈயும் அவ்
வள்ளி யோரின் வழங்கின மேகமே.

(இராமா; ஆற்று 6)

பாரி பாரி என்றுபல ஏத்தி
ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர்;
பாரி ஒருவனும் அல்லன்
மாரியும் உண்டுஈண்டு உலகுபுரப் பதுவே.

(புறம் 107)