பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணியறுபது

43



வாய்வரத் தக்க சொல்லி

என்னையுன் வசம்செய் வாயேல்

ஆய்தரத் தக்க தன்றோ

தூதுவந்து அரசது ஆள்கை;

நீதரக் கொள்வேன் யானே?

இதற்கினி நிகர்வே றெண்ணின்

நாய்தரக் கொள்ளும் சீயம்

நல்லர சென்று நக்கான். (2)
(இராமா: அங்கதன் தூது)

அங்கதனுடைய தறுகண்மை தூய்மை சொல் வன்மைகள் இங்கே துலங்கியுள்ளன. உண்மைகளை ஊன்றி நோக்கி உறுதியை உணர்ந்துகொள்க.

வில்வீரத்தை இங்கே விதந்து குறித்தது. அரிய ஒரு கலையாய் அது மருவியுள்ளமை கருதி, தனு வேதம் என்று வேதத்துள் ஒரு பிரிவாக இச்சிலையின் கலை உயர் நிலையில் சிறந்துள்ளது.


10

குடிகளைக் காத்தருளல் கோனணி கோன்சொற்
படிநடத்தல் அன்னார் பணியாம்-மடியில்
இழியாமை மக்கட் கினியஅணி யார்க்கும்
பழியாமை யேஅணியாம் பண்பு.

இ-ள்

குடிசனங்களை இனிது பாதுகாத்தல் அரசனுக்கு அழகு; அம்மன்னவன் சொல்லியபடி நடத்தல் அன்னவர்க்கு அழகு; சோம்பாமல் முயலுதல் மக்களுக்கு அழகு. யாரையும் யாதும் பழியாத பண்பு எல்லார்க்கும் யாண்டும் நல்ல அழகாம் என்க.