பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

அணியறுபது


எல்லாரும் உள்ளம் உவந்து புகழ்வது வள்ளல்களையே. ஆகவே புகழ்க்கு அணி என்று அவர் ஈண்டு ஏற்றமாய்ப் போற்ற வந்தனர்.


12 ஆர்ந்த துறவிக் கணியவா வின்மையே
நேர்ந்துமனை வாழ்வார்க் கணிநிதியே -சார்ந்த
விருந்துக் கணிவிரைந்து மீளலே மேலாம் ::மருந்துக் கணிபிணிமாய் வாம்.

(க.உ)

இ-ள்

ஆசை யாதும் இல்லாமையே துறவிக்கு அழகு; இல்லற வாழ்வுடையார்க்குச் செல்வமே அழகு; விரைந்து மீண்டு போதலே விருந்தினர்க்கு அழகு: நோயை விரைவில் நீக்குவதே மருந்துக்கு அழகு என்க.

அவா=ஆவலான நசை.

உலக நசைகளை அறவே துறந்தவர் துறவி என நேர்ந்தார். அகப்பற்று புறப்பற்று எனப் பற்றுகள் இருவகையின. இவை யாவும் அற்றவரே முற்றத் துறந்தமுனிவர் எனத் தனிமகிமைதோய்ந்துள்ளனர்.

ஆசை சிறிது பற்றினாலும் அது நீசம் உற்றதாம்.

ஆசைஎனும் பெருங்காற்றுாடு இலவம்பஞ்சு
எனவும் மனது அலையும் காலம்
மோசம்வரும்;இதனாலே கற்றதும்கேட்
டதும்துார்ந்து முத்திக் கான
நேசமும்நல் வாசமும்போய்ப் புலன்நாயின்
கொடுமைபற்றி நிற்பர் அந்தோ!
தேசுபழுத்து அருள்பழுத்த பராபரமே!
நிராசையின்றேல் தெய்வம் உண்டோ?

(தாயுமானவர்)