பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அ ணி ய று ப து

87


புகழ்ந்து பலவாறு வனைந்து புனைந்து வந்த கவிஞர் பெருமான் இறுதியில் செஞ்சொற் கவி இன்பம் என்று நெஞ்சம் உவந்து துதித்துள்ளார்.

அழகிய கவிகளில் அதிசய இன்பங்கள் சுரங்து நிறைந்து உள்ளன. அந்த உண்மைகளை நுண்மையாய் உணர்பவர் விண்ணுலக இன்பங்களையும் விழையார். அறிவின் சுவையான கவியின்பங்களையே கருதி மகிழ்வர்; களித்துத் திளைப்பர்.

மாணிக்கம், மரகதம், வைரம் முதலிய மணிகளின் குண நலன்களைக் கூர்ந்து அறிபவர்க்கே அவற்றின் சீர்மை நீர்மைகள் தெரிய வரும்.

கவிகளின் சுவைகளைக் கருதி யுணர்பவரே அவற்றின் அருமை பெருமை அழகு இனிமைகளைத் தெளிவாகத் தெரிந்து உவந்து கொள்வர்.

இரத்தினங்களைச் சோதித்துத் தெரிபவரினும் கவிகளைச் சோதித்துத் தெளிபவர் மிகவும் அரியர்.

மணி அறிவினும் கவி அறிவு உயர் சுவையுடையது; உயிர்க்கு இன்பமாய் ஒளி புரிந்து வருவது. மாதிரிக்காக ஒரு கவி இங்கே காண வருகிறது. கருத்தை ஊன்றிக் காண வுரியவர் தம் காட்சி அளவு கண்டு மகிழ அது நீட்சி எய்தியுளது.

வெய்யோன் ஒளி தன்மேனியின்
விரிசோதியின் மறையப்
பொய்யோஎனும் இடையாளொடும்
இளையான்ஒடும் போனான்: