123
காண்கின்றோம். நாட்டுப் பாடல் என இமயத்தையும் குமரிமுனையையும் தனியே பாடிய கவிஞர் மொழிவழியால் தமிழ் நாட்டின் எல்லையையும் உடன் குறிப்பிடுவது, மொழியும் நாடும் பிரிந்தியங்கா என்பதைக் காட்டவே எனக் கூறலாம்.
நீலத் திரைக்கடல் ஓரத்திலே - நின்று
நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை - வட
மாலவன் குன்றம் இவற்றிடையே - புகழ்
மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு
எனத் தமிழோடு நாட்டையும் ஒருங்குவைத்துக் காணும் காட்சியைக் காண்கிறோம்.
செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே
என்று மொழியுணர்வையும் நாட்டுப் பற்றையும் ஒருங்கு ஊட்டிச் செந்தமிழ் நாடு என்ற தொடரால் சிறப்பிக்கிறார்.
நாட்டையும் மொழியையும் ஒருங்கு அமைத்துப் பாடும் இயல்பு ‘பாப்பாப்’ பாட்டிலும் காண்கின்றோம். பாரத நாட்டின் குழந்தை தமிழ்நாடு என்று கூறித் தமிழ் நாட்டுக்கும் பாரதநாட்டுக்கும் உள்ள தொடர்பைப் புலப்படுத்துகின்றார். பாரத நாடும் அதன் பகுதியாகிய தமிழ்நாடும் அமுதின் இனியன என்று அழகாகக் கூறுகின்றார்.
தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற - எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா!
அமிழ்தின் இனியதடி பாப்பா - நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா
என்று கூறுகிறார். தமிழ்நாட்டைப் பெற்றதால்தான் இந்திய நாட்டுக்குப் பெருமை உண்டாகியிருக்கிறது என்பதைக் குறிப்பாக உணர்த்தக் காண்கிறோம்.