42
விட்டு வெளியேறும்பொழுது அவள் உள்ளத்தில் பல எண்ணங்கள் மோதுகின்றன. கணவனோடு வந்து கவின்பெற்ற வாழ்வு கலைந்து விட்டதை உணர்கிறாள்; அவள் கண்ட கனவுகளும், கொண்ட உறுதிகளும் சிதைந்து அவள் உள்ளம் சிலையில்லா வெறுங்கோயிலாகிவிடுகிறது. தான் போற்றிவந்த பெரிய பொருளைத் திடீரென்று எதிர்பாராமல் இழந்துவிட்ட அவலம் அவள் உள்ளத்தைக் கவ்வுகின்றது. சேரநாடு நோக்கிச் செல்லும் அவள் சிந்தை சோழ நாட்டிலிருந்து பாண்டிய நாட்டிற்புகுந்த அந்த நாட்களை எண்ணுகின்றது. அவலத்தின் எல்லையை அடைந்து உள்ளத்தின் சுமையாக இருந்த துன்பம் அனைத்தையும் சில சொற்களால் சொல்லிக் கையறுகின்றாள்:
கீழ்த்திசை வாயிற் கணவனொடு புகுந்தேன்
எனச் செயலற்றுப் பேசுகின்றாள். மதுரை மாநகருள் கணவனோடு புகுந்ததும், அதைவிட்டுச் செல்லும் பொழுது கணவனின்றி நீங்குவதுமாகிய இரண்டு காட்சிகளையும் ஒரே இடத்தில் வைத்துக் காட்டியிருப்பது அவலச் சுவையை மிகுதிப்படுத்துகிறது.
இவ்வாறு இளங்கோவடிகள் ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியை இரண்டு காட்சிகளால் ஆங்காங்குக் காட்டி, அக்காவியத்தின் சுவையையும், அழகையும் உயர்வுபடுத்திக் கற்பார் நெஞ்சத்தை அக் காட்சிகள் கொள்ளும் வண்ணம் செய்து அதனை நெஞ்சை அள்ளும் காவியமாக அமைத்து விட்டார் எனலாம்.