57
கையால் துழாவி அதனை அமைக்கும் ஆர்வத்தால், அப்படியே தான் அணிந்துகொண்டிருந்த புடவையில் கையைக் கழுவாமல் துடைத்துக்கொண்டு, அந்தக் குழம்பைத் தாளிதம் செய்து, அக்குய்ப்புகை அவள் கண்களில் படியத் தானே துழாவி அட்ட புளிக் குழம்புச் சோற்றினை அவனுக்கு இட்டு, ஆர்வமும் அன்பும் பெருக அவன் முன்னால் நின்று அவன் பாராட்டுதலை எதிர்பார்க்கிறாள். அவள் குறிக்கோளெல்லாம் அவ்வுணவை உண்ணும் அவன் வாயிலிருந்து ‘இனிது’ என்ற சொல்லைக் கேட்பதாக இருக்கிறது. அவள் துழந்து அட்ட உணவு இனிதாக இருக்கிறது என்று அவன் கூறும் சொற்கள் அவள் உள்ளத்து மகிழ்ச்சியை மிகுதிப்படுத்துகின்றன. புதுமண வாழ்வால் பொலிவு பெற்ற அவள் அழகிய முகம் நுட்பமாக அச் சிறு மகிழ்ச்சியை மிகுதிப்படுத்துகின்றது. அவ்வன்புடை நெஞ்சங்கள் நடத்தும் அகவாழ்வு இச் சிறுநிகழ்ச்சிகளால் பொலிவு பெறுகின்றது.
முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்
கழுவுறு கலிங்கங் கழாஅ துடீஇக்
குவளை உண்கண் குய்ப்புகை கமழத்
தான்துழந் தட்ட தீம்புளிப் பாகர்
இனிதெனக் கணவன் உண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒள்நுதல் முகனே
- குறுந்தொகை, 167
மற்றொரு தலைவன் தனக்கும் அவளுக்கும் நேர்ந்த ஊடல் தீர்வதற்கு விருந்தினர் வருகையை எதிர்பார்க்கிறான். விருந்தால் அவள் உவந்து முறுவல் கொள்ளும் முகத்தைக் காணும் காட்சியை எதிர்நோக்கும் ஆவலில் அவர்கள் அன்புடை நெஞ்சம் சித்திரிக்கப்படுகின்றன. விருந்து வந்தால், அவள் அவனோடு அவர்களை வரவேற்க முறுவல் கொள்வாள். அதனால் அவள் மகிழும் முகத்தைப் பார்க்கமுடியுமே என்று அவாவுகிறது அவன் நெஞ்சு.