பக்கம்:அணியும் மணியும்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

89


தொல்லை நம் பிறவியின் எண்ணிக்கைகளை எண்ணிப் பார்த்தால் அவற்றிற்கு எல்லையே இல்லை என்றும், அதைப் போல நம் வாழ்வும் ‘இல்லினுள் இரண்டு நாளைச் சுற்றம்’ போன்றது என்றும் சச்சந்தன் கூறுகின்றான். இவ்வாறு கூறி விசயமாதேவியாகிய அவன் மனைவிக்கு ஆறுதல் கூறுகிறான்.

இதே போலச் சீவகனைப் பிரிந்த கேமசரியின் ஆற்றாமையைக் கண்டு ஆற்றப் புகுந்த அவள்தாய் விளக்குகிறாள். இளமை நீர்க்குமிழி போல நிலையற்றது என்றும், இன்பம் மின்னலைப் போலத் தோன்றி மறையக் கூடியது என்றும், செல்வம் வெயிலுறு பனியைப் போல நீங்கும் இயல்பினது என்றும் அவள் தாயின் கூற்றிலே விளக்குகின்றார்.

மன்னுநீர் மொக்குள் ஒக்கும் மானிடர்இளமை; இன்பம்
மிண்ணின் ஒத்து இறக்கும்; செல்வம் வெயிலுறு பனியின் நீங்கும்;
இன்னிசை இரங்கும் நல்யாழ் இளியினும் இனிய சொல்லாய்!
அன்னதால் வினையின் ஆக்கம் அழுங்குவது என்னை

- கேமசரி. 126

என்று கூறுகிறார்.

இவ்வாறு உலகத்தின் பொதுவான நிலையாமையை அறிவதால் தனிப்பட்டவர் தாம் அடையும் துன்பத்தை அவற்றோடு ஒப்பிட்டு ஆற்றிக்கொள்ள முடிகிறது. இன்பம் துய்க்கும் பொழுது தம் இன்பத்தின் அளவைப் பெரிது என உவந்தால் இன்பம் பெரிதாகக் காணப்பட்டு மகிழ்ச்சியை ஊட்டுகிறது. தனக்கு வரும் துன்பத்தைப் பெரிதாகக் கருதி அதனாலேயே சோர்ந்து விட்டால் மனம் சோர்ந்து செயலிழந்து வாழ்வு நசிந்துவிடும். அதனால்தான் புலவர்களும் பெரியோர்களும் உலகத்தின் நிலையாமையைச் சொல்லித் தனிப்பட்ட