பக்கம்:அணியும் மணியும்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

வாழுமா என்ற கேள்வியே உலகமுழுவதும் எழுந்துள்ளது. உலகப் பேரரசுகள் இந்த இயற்கையை மாற்ற வழி ஏதும் செய்யாவிட்டால் உலகம் அழிந்து விடுதல் உறுதி. புறநானூறு உலகில் போர் இயற்கை என்று கூறுகிறது; நாம் அமைதி வேண்டும் என்று அவாவுகிறோம். இதற்கு உலகம்தான் வழி சொல்லியாக வேண்டும்.

நாடும் உலகும் பண்புள்ளதாகச் செய்ய வேண்டுமானால் மக்களின் பண்பு உயர வேண்டும். மக்களும் அவரை ஆளும் அரசியல் சூழலும் சிறந்தால்தான் நாட்டில் வளர்ச்சி உண்டு; மக்கள் வாழ்வில் ஆக்கம் உண்டு என்பது யாவரும் ஒப்புக்கொள்ளக் கூடிய உண்மையாகும். இந்த உண்மையைப் புறநானூற்றுப் பாடல் ஒன்று எடுத்துக் கூறுகின்றது. “நிலனே நீ ஓரிடத்தில் நாடாகுக; ஒன்றில் காடேயாகுக; ஒன்றில் பள்ளமேயாகுக: ஒன்றில் மேடேயாகுக எவ்வாறு ஆயினும் எவ்விடத்து மக்கள் நல்லரோ அவ்விடத்து நீயும் நல்லை! மக்கள் நலமல்லது நினக்கு என ஒரு நலம் இல்லை” என்று நிலத்தின் இயல்பை நிலத்தை விளித்துக் கூறுவது போன்ற அமைப்பில் இப் பாடல் விளக்குகின்றது. மக்களின் பண்பாடு சிறந்தால்தான் நாடு நாடாக இருக்க முடியும். பண்பாடு இல்லையென்றால் நாடு சிறக்காது. உழவும் தொழிலும் சிறக்க மக்களின் பண்பாடும் உழைப்பும் ஊக்கமும் இன்றியமையாதனவாகும். அப்பொழுது தான் வாழ்வு வளனும் பயனும் உடையதாக இருக்கும் என்ற கருத்து வற்புறுத்தப்படுகிறது.

நாடாகு ஒன்றோ; காடாகு ஒன்றோ
அவலாகு ஒன்றோ; மிசையாகு ஒன்றோ;
எவ்வழி நல்லவர் ஆடவர்

அவ்வழி நல்லை நிலனே

என்பது இக் கருத்தை விளக்கும் புறப்பாட்டாகும்.