பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கதிரியக்க ஓரிடத்தான்கள்

147


தொழிலியல் தொழிற்சாலை, அறிவியலாராய்ச்சி முதலிய பல துறைகளிலும் பயன்படுத்தும் திறமையான முறைகளைக் கண்டறிந்திருப்பதுதான் அது. இம்முறைகளைப் பின்னர்க் காண்போம்.

கதிரியக்கமுள்ள ஓரிடத்தான்-பண்புகள் : கதிரியக்கமுள்ள ஓரிடத்தான்கள் பல முறைகளில் பயன்படுகின்றன என்பதை மேலே சுட்டியுரைத்தோம். அத்தகைய ஒரிடத்தான்களின் உயர் பண்புகள்தாம் யாவை ? கதிரியக்க ஓரிடத்தான்கள் சிதைந்தழிகின்றன என்று மேலே கூறினோம் அல்லவா? அவ்வாறு அவை சிதையுங்கால் துணுக்குகளையும் ஆற்றலையும் வெளியிட்ட வண்ணமிருக்கின்றன. பெரும்பாலும் ஆற்றல் சூடாகவே வெளிப்படுகின்றது. இச்சூடு கண்ணுக்குத் தெரியாத கதிர்களாக வெளிப்படுகின்றது. கதிரியக்கமுள்ள பொருள்கள் மூன்றுவித கதிர்களை வெவ்வேறு அழுத்தத்திலே27 வெளியிடுகின்றன என்றும், அவை பேராற்றல் வாய்ந்தவை என்றும் முன்னர்க் கண்டோம். இக்கதிர்கள் மிகவும் அபாயகரமானவை ; மானிட உடலுக்குப் பெருங்கேட்டை விளைவிக்கக் கூடியவை. எனவே, கதிரியக்க ஓரிடத்தான்களைக் கையாளுபவர்கள் மிகக் கவனத்துடன் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும்.

மற்றொரு பண்பு-அரை-வாழ்வு : கதிரியக்க ஓரிடத்தான்களிடம் மற்றொரு மிக முக்கியமான பண்பு உள்ளது. அஃதாவது, அவை ஒரு மாறாத வேகத்தில் சிதைந்து அழிந்து இறுதியில் கதிரியக்கத் தன்மையையே இழந்துவிடுகின்றன. இக்கிரியை முழுவதும் தானாகவே நடைபெறுகின்றது; எந்தவித இயந்திர யுக்தியைக் கொண்டும் அக்கிரியையின் வேகத்தை மிகுதிப்படுத்தவும் முடியாது; குறைவாக்கவும் முடியாது. ஒவ்வொரு கதிரியக்கத் தனிமத்திலும் வினாடிதோறும் அப்பொருளின் குறிப்பிட்ட ஒரு சிறு பகுதி சிதைந்தழிந்த வண்ணமிருக்கின்றது. இப்பகுதி மிகப் பேரளவில் இருந்தால், இக்கிரியை மிகத் தீவிரமாக நடைபெறும்;


27அழுத்தம்-intensity