பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/195

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உயிரியலும் அணுவும்

179


நேர் இயல் மின்னிகள், பொது இயல் மின்னிகள் என்ற இரு வகைத் துணுக்குகளால் ஆனது. மிகப் பெரிய ஆற்றல் இந்தத் துணுக்குகளைப் பிணைத்து வைத்திருக்கின்றது. அணுவைச் சிதைத்து இந்த ஆற்றலை விடுவிக்கும் பொழுதும், கோள் நிலையில் சுழலும் எதிர்மின்னிகளை அவை செல்லும் பாதைகளினின்று மாற்றும்பொழுதும் உயர்வாற்றல் கதிர்வீச்சு எழுகின்றது. இந்த உயர்வாற்றல் கதிர்வீச்சுக்கள் யாவும் உயிரணுக்களையும்11 உயிரிழையங்களையும்12 ஒரே மாதிரியாகத்தான் பாதிக்கின்றன. சிலவகைக் கதிர் வீச்சுக்களால் அதிக அளவு கேடு விளையக்கூடும் ; ஆனால், நேரிடும் ஊறு ஒருவகைப்பட்டதேயாகும்.

கதிர்வீச்சு வகைகள் : உயிரியலைப்பற்றிய வரையில் நாம் ஐந்து வகையான கதிர்வீச்சுக்களை அறிந்துகொள்ள வேண்டும். கதிர் வீசலைப்பற்றி ஏற்கனவே அறிந்து கொண்டுள்ள செய்திகளுடன் அடியிற் கண்டவற்றையும் இணைத்து அறிந்து கொள்ளுதல் பெரும்பயன் விளைக்கும்.

(அ) ஆல்பா - துணுக்குகள் : இவை அதிக அளவில் கேடு பயக்கக்கூடிய நேர்மின்னூட்டம் பெற்ற துணுக்குகள்; அளவில் பெரியவை. அவை சிதைவுறாத தோலைத் துளைத்து உள்ளே செல்லும் ஆற்றலற்றவை. ஆனால், அவற்றை விடுவிக்கும் தனிமம் உடலினுள் படிந்து விட்டால், அது வெளி விடும் கதிர்களால் உடல் மிகவும் கேடுறும்.
(ஆ) பீட்டா - துணுக்குகள் : இவை எதிர்மின்னூட்டம் பெற்றவை. இவை தோலினைத் துளைத்துச் சென்று கேடு பயக்கும் தன்மை வாய்ந்தவை. அங்குலம் அளவு இழையத்தினத் துளைத்துச் செல்லக்கூடியவை.
(இ) காமா - கதிர்கள் : மிகவும் கேடு பயக்கக் கூடியவை. இவை தாக்கியவுடன் ஏற்படும் கேடு கண்ணுக்குப் புலனாவதில்லை ; தாக்கின பல நாட்களுக்குப் பிறகே அது கண்ணுக்குப் புலனாகின்றது.

11உயிரணு-living cell.12உயிரிழையம் - living tissue.