பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/227

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மருத்துவத்துறையில் அணு

211


மிக விழிப்புடனிருந்து ரேடியம் உடலினுள் இருக்கவேண்டிய கால அளவை நிர்ணயித்து அதற்கேற்றவாறு கையாள வேண்டும். கவனக் குறைவாக இருந்தால் அக்கதிர்கள் அளவுக்குமீறி உடலிற் புகுந்து வேறு கோளாறுகளை விளைவித்துவிடும் தலைவலி போய் திருகுவலி வந்த கதையாய் முடியும். ஆகவே, வேறு கதிரியக்கப் பொருள்களைப் பயன்படுத்திச் சிகிச்சை செய்யத் தலைப்பட்டனர். ரேடியம் சிதையும்பொழுது உண்டாகும் ரேடான்[1] என்ற சோம்பேறிக் கூட்டத்தைச் சேர்ந்த வாயுவைப் பயன்படுத்தினர். இவ்வாயுவும் கதிரியக்க இயல்புடையது ; காற்றுடன் கலந்து நாம் விரும்புகிறவாறு இதனைப் பயன்படுத்தலாம். இதனால் வரம்புகடந்த சிகிச்சையைத் தவிர்த்துவிடலாம். ஆனால், முற்றிவிட்ட புற்றை இவ்வாயுவைக்கொண்டு கட்டுப்படுத்த இயலாது. எனவே, கதிரியக்கச் சிகிச்சை அண்மைக் காலம்வரையில் இக்குறைகளைக் கொண்ட மிக அரிதாகப் பயன்படும் சாதனமாக விளங்கியது. அன்றியும், ரேடியம் மிக விலையுயர்ந்த பொருளாதலாலும் அதனை எளிதாகக் கையாளுவது அனைவராலும் இயலாத தொன்றாதலாலும் அச்சிகிச்சை எங்கனும் பெருவழக்காகப் பரவ வழியேற்படவில்லை.

செயற்கைக் கதிரியக்கம் கண்டறியப்பெற்ற பிறகு இத்துறையில் வியத்தகு மாற்றம் ஏற்பட்டுவிட்டது. எல்லாத் தனிமங்களையும் கதிரியக்கப் பண்பு கொண்டவைகளாகச் செய்யும் முறைகள் கண்டறியப் பெற்றுவிட்டன. செயற்கை முறையில் உண்டாக்கப்பெறும் கதிரியக்க ஓரிடத்தான்களின் அரை-வாழ்வு சில வினாடிகளிலிருந்து பல்லாயிர ஆண்டுகள்வரை அமைந்திருக்கின்றது. குறைந்த அரை - வாழ்வுடைய ஓரிடத்தான்கள் முதலில் தீவிரமான கதிரியக்கமுடையவையாயுள்ளன ; ஒன்றிரண்டுமணி நேரத்தில் அதன் கதிரியக்கப் பண்பு பெரும்பாலும் இழக்கப்படுகின்றது. மூன்று நான்கு நாட்களுக்குப் பிறகு அதன் பெரும் பகுதி இல்லாது மறைந்தேவிடுகின்றது ; எஞ்சியுள்ள மிகவும்


  1. 32. ரேடான் - radon.