பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/328

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

312

அணுவின் ஆக்கம்



பல நாடுகளில் அணுவாற்றலிலிருந்து தோன்றும் மின்னாற்றல் தன்னோடு கூடியுள்ள விளைவுகளுடன் மிக விரைவாகத் தோன்றும். பள்ளிச்சிறார்களாக இருப்பவர்கள் வாழ்க்கையில் புகுவதற்கு முன்னர், அவ்வளவு குறுகிய காலத்தில் அங்கு அவ்வாற்றல் வளர்ச்சிபெற இடம் உண்டு. பொது நலன்களுக்குச் செலவிடப் பெறும் ஏராளமான தொகைகளுக்குப் பொது மக்களின் உதவியும் தேவைப்படும். மருத்துவம், உழவுத்தொழில், தொழில்துறை ஆகியவற்றில் அணுவாற்றல் ஆராய்ச்சியில் கண்ட உண்மைகளைப் பயன்படுத்துவதிலும் பொது மக்கள் அக்கறையுடன் பல செய்திகளைப் புரிந்து கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் விட, இப் பயங்கர ஆற்றலின் புரட்சியில் தோன்றும் பொருளாதார சமூக விளைவுகளினால் அரசாங்கம் முன் யோசனையுடன் இயங்கவேண்டும்; உள்நாட்டுப் பண்பாடுகளில் பரந்த நிலையில் அறிவியலை இணைத்துக் கொள்ளவேண்டும். பலவந்தமாகத் திணிக்கப்பெறும் அணுவாற்றலின் பொருளாதாரத் திட்டம் அறிவியல் அடிப்படையில் அமையாத பண்பாட்டிற்குச் சிறிதும் பொருந்தாது ; அது பெருங் கேட்டையும் விளைவிக்கச் செய்யும்.

ஆகவே, பல்வேறு நாடுகளிலுமுள்ள வயது வந்த பொது மக்களுக்கு அறிவியல் முறையில் சிந்தனையை வளர்க்கும் அடிப்படைக் கருத்துக்களை உணர்த்துதல் வேண்டும்; அதற்கேற்ற கல்வித் திட்டத்தையும் வகுக்க வேண்டும். ஐக்கிய நாட்டுக் கல்வி - அறிவியல் - பண்பாட்டுக் கழகம் பொதுமக்கள் கல்வியில் பலவிதமாக அக்கறையைக் காட்டி வருகின்றது. ஊர் ஊராகக்கொண்டு செல்லக்கூடிய காட்சிப் பொருள்களாலும், பள்ளிக்கு வெளியே நடைபெறும் அறிவியல் செயல்களாலும், செய்தித்தாள்களின் வாயிலாக கட்டுரைகள், ஆராய்ச்சி வெளியீடுகள் ஆகியவற்றின் மூலமும், வானொலி வாயிலாகவும், படக் காட்சிகளின் மூலமும் இந்த அறிவினைப் பரப்பி வருகின்றது. இவையாவும் ஒரு முறையில் மக்களுக்குக் கல்வி புகட்டும் சாதனங்களேயாகும். சில பருவ வெளியீடுகளும் இத்துறையில் பெருஞ் சேவை புரிகின்றன.