பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/111

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

101


முதல் மருத்துவப்பல்கலைக் கழகம்

அக்காலத்தில் மிகப் புகழ்பெற்ற மாபெரும் மருத்துவமனை ஒன்று பாக்தாத் நகரில் செயல்பட்டு வந்தது. ஒரு பெரும் மருத்துவமனைக்கு தேவையான, இருக்கவேண்டிய வசதிகள் அனைத்தையும் கொண்டிருந்தது. பல பெருங்கட்டிடங்கள் ஒன்றிணைந்திருந்தன. இம்மாபெரும் மருத்துவமனையில் பெரும் எண்ணிக்கையில் மருத்துவர்கள் ஆண்களும் பெண்களுமாகப் பணியாற்றினர். மருத்துவக்கருவிகள் அனைத்தும் அங்கே இருந்தன. மருத்துவக் கல்வி பெறும் மாணவர்களும் மாணவிகளும் நிறைந்திருந்தனர். இதையே இஸ்லாமிய உலகில் உருவாக்கப்பட்டிருந்த முதல் ‘மருத்துவப் பல்கலைக் கழகம்’ எனக்கூறலாம்.

இம் மருத்துவமனையில் மருத்துவத் துறையில் சிறந்து விளங்கிய திறனாளர்கள் பலரும் பணியாற்றினர்; கண் அறுவை சிகிச்சையில் சிறந்து விளங்கிய அபுல் கைர், அபூ கோலத் ஆகியோரும் கண் மருத்துவ நிபுணருமான அபூ நஸ்க், இப்னு அல் துகாலி என்பவரும் இம் மாபெரும் மருத்துவமனையில் பணியாற்றி வந்தவர்களேயாவர். இந்த மருத்துவமனையின் உன் மாதச் சிறப்புகளையும் அங்கு அளிக்கப்பட்ட சிறந்த சிகிச்சை முறைகளையும் மருத்துவர்கள் கையாண்ட கருவிகளையும்,அங்கு மாணவர்கட்கும் போதிக்கப்பட்ட சிறந்த மருத்துவக் கல்விப் பயிற்சியையும், இம் மருத்துவமனையைச் சுற்றியிருந்த மருந்துக்கடைகளின் மாண்பையும், மருந்துகளின் பட்டியலையும், அங்கு நோயாளிகட்கு வழங்கப்பட்ட உணவு வகைகளையும் பற்றிய குறிப்புகளைக் கொண்ட பட்டியல் இன்றும் லண்டன் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.