பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/13

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
3

புற வாழ்வையும் போற்றி வளர்த்து உன்னதமாக்கும் உயர் வழியை வகுத்தளித்த பெருமைக்குரியவராகவும் விளங்குகிறார். அக வாழ்வின் வளர்ச்சிக்கு வளமூட்டிய வள்ளல் நபி புற வாழ்வின் அனைத்துக் கூறுகளையும் முனைப்புடன் வளர்க்க—வளப்படுத்த வழிகாட்டிய சிறப்புக்குரியவரும் ஆவார்.

மனிதனின் மாண்பு

இஸ்லாத்தைப் பொருத்த வரை மனிதனைப் பற்றிய கணிப்பே மகத்தானதாகும். வல்ல அல்லாஹ்வால் படைக்கப்பட்ட மனிதன் இறையம்சமுடைய உன்னத உயிரினமாக உருவாக்கப்பட்டுள்ளான். இறைவனின் படைப்பினங்களிலேயே—உயிரினங்களிலேயே உன்னதமான தனித்துவமுள்ளவனாக மனிதன் விளங்குகிறான். இந்த தனித்துவம் எதன் அடிப்படையில் அமைந்துள்ளது?

உயிரினங்களிலேயே மனிதன் மிகுந்த பலமுடையவனா? யானை இவனை விடப் பெரியது மட்டுமல்ல இவனை விடப் பல மடங்கு பலமுள்ளதுமாகும். உயிரினங்களிலேயே மிகுந்த வீரம் உள்ளவனா என்று பார்த்தால், அதுவும் இல்லை என்றே கூற வேண்டியதாக இருக்கிறது. புலியும், சிறுத்தையும் மனிதனை விடப் பல மடங்கு வீரம் செறிந்தவைகளாகும். பிற உயிர்களை விட மனிதன் வீரியம் மிக்கவனா என்றால், அப்படியும் சொல்வதற்கில்லை. சிட்டுக்குருவி இவனை விட வீரியம் மிக்கதாகப் பறந்து கொண்டிருக்கிறது. இன்னும் சொல்லப் போனால், மனிதன் தன் வீரிய விருத்திக்கே ‘சிட்டு குருவி லேகிய’மல்லவா சாப்பிடுபவனாக இருக்கிறான்!

பிற உயிரினங்கள்
பெற்றுள்ள பேராற்றல்

சரி, பிற உயிரினங்களைவிட மனிதன் நுட்பத்திறன் மிக்கவனா என்றால், அப்படியும் கூறுவதற்கில்லை.