பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/15

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

5

சிந்தனை ஆற்றலும் பகுத்து ஆராயும் தன்மையும் தான் மனிதனைப் பிற உயிரினங்களிலிருந்து வேறுபடுத்திக்காட்டுகிறது. இதன் மூலம் உயிரினங்களிலேயே மிக உயர்ந்த சிகரமான சிறப்பிடத்தை பெற்றுத் திகழ்கிறான் மனிதன்.

அறிவைப் பெருக்கும் அருங்கல்வி

மனிதச் சிந்தனையைச் கூர்மைப்படுத்தும் சாணையாக அமைந்திருப்பது தான் கல்வி, அறிவைப் பொருக்கும் அருங் கருவியாக அமைந்துள்ள கல்வியைத் தவிர்த்து அவன் உயர்வுக்கும் திறன் வளர்ப்புக்கும் வேறு எதுவும் பெரும் காரணமாக அமைவதில்லை எனத் துணிந்து கூறலாம்.

அறிவு வளர்ச்சி, சிந்தனை வளம் ஆகியவற்றிற்கான ஊற்றுக்கண்ணாக விளங்கும் கல்விப் பெருக்கிற்கேற்பவே மனிதனின் உயர்வும் சிறப்பும் அமைகிறது. நம்மைச் சரியான முறையில் கணித்தறியும் அளவு கோலாகவும் அதுவே அமைகிறது.

கல்வி எனும் பாதுகாப்புக் கேடயம்

கல்வியை மனிதனுக்குச் சிறப்பும் பாதுகாப்பும் தரும் வல்லமை கொண்ட வேறொன்று இருப்பதாகக் கூற முடியாது. மனிதன் முயன்று தேடிய செல்வமோ பிறவோ தரமுடியாத வாழ்க்கைப் பாதுகாப்பையும் உயர்வையும் கல்வியால் மட்டுமே பெறவியலும் என்பதை “சொத்தை நீங்கள் பாதுகாக்கவேண்டும். ஆனால், கல்வி உங்களுக்குப் பாதுகாப்புத் தருகிறது”, என்றார் ஹலரத் அலி(ரலி) அவர்கள்.

எனவேதான் பெருமானார் அவர்கள் கல்வியின் முக்கியத்துவத்தை மிக அதிகமாக வற்புறுத்திக் கூறினார்கள்.