பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/16

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

இவரளவுக்குக் கல்வியின் இயல்பையும் அதன் உயர்வையும் எடுத்துக் கூறி உணர்த்திய வேறொரு மனிதப் புனிதரை நானில் வரலாற்றில் காண்பது அரிது.

கல்விபற்றிப் பெருமானார்

தன் வாழ்நாள் முழுவதும் கல்வியின் சிறப்பையும் உயர்வையும் வற்புறுத்தி வந்த அண்ணலார் அவர்கள் ஒரு சமயம் கூறினார்: ‘கல்வி எங்கிருந்தாலும் அதை முயன்று தேடிப் பெறுபவன் தூய செயல் செய்தவனாவான்: கல்வியின் சிறப்பையும் உயர்வையும் எடுத்துக்கூறி விளக்குபவன் இறைவனின் புகழைப் பாடியவனாவான்: கல்வியை நாடிச் செல்பவன் இறை துதி செய்தவனாவான்; கல்வியைக் கற்பிப்பவன் அறம் செய்தவனாவான்; தகுதி மிக்க மக்களிடையே கல்வியைப் பரவச் செய்பவன் இறைவணக்கம் செய்தவனாவான்’ என்பதாகும்.

அது மட்டுமா?

கல்வியாளன் தன் அறிவுத் திறத்தால் இவ்வுலகவாழ்வில் மட்டுமல்லாது மறுமை வாழ்விலும் மாபெரும் சிறப்பைப் பெறும் தகுதியுடைவனாகிறான் என்பதை “அறிவின் துணையால் இறைவனின் அடியான் நன்மையின் உச்சத்தை அடைகிறான். உயர்மிகு சிறப்பிடத்தைப்பெறுகிறான்” என நபிகள் நாயகம் (சல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்.

இறை கட்டளை

மனிதன் கல்வியின் துணை கொண்டு தான் பெற்ற நல்லறிவின் துணையால் உலகில் நல் மாற்றங்கள் எதனையும் நிகழ்த்த வேண்டும் என்பதே இறை விருப்பமாகும் இதையே திருமறை,