பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/58

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

ரைஹான், முஹம்மது இப்னு அஹமத் அல்பிரூனி, முஹம்மது பர்கனி, ஜாபிர் இப்னு அப்ரா போன்றோர் குறிப்பிடத்தக்கவர்களாவர்.

நாடாராய்ச்சியும் கடற்பயணமும்

விண் ஆய்வில் தேர்ந்து விளங்கியது போன்றே மண்ணுலக ஆராய்ச்சியிலும் திறம்பட்டவர்களாக விளங்கியவர்கள் முஸ்லிம்கள். பூகோள அறிவில் முன்னோடிகளாக அன்றைய முஸ்லிம்களே விளங்கினர் என்பதை வரலாறு மிகத் தெளிவாக உணர்த்திக் கொண்டுள்ளது.நாடாராய்ச்சியும் கடற்பயணமும் அன்றைய முஸ்லிம் களால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்தது.

தேவையே ஆய்வுக்குத் தாய்

பூகோள அறிவு பெறுவது அன்றைய முஸ்லிம்களின் இன்றியமையாத் தேவையாகவும் கடமையாகவும் அமைந்திருந்தது. ஏனெனில், இறைவணக்கம் புரியும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவரும் புனிதமிகு மக்கா மாநகரில் அமைந்துள்ள கஃபா இறையில்லம் நோக்கியே தொழுகைகள் நடத்தப்பட வேண்டும் என்பது இஸ்லாமிய விதியாகும். இதனால் மக்காவுக்கு அப்பால் வாழும் மக்களுக்குக் கஃபாவின் திசையறிந்து தொழ வேண்டிய கட்டாயக் கடப்பாடு.

மேலும், உலகெங்கும் வாழும் முஸ்லிம் பெருமக்கள் இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஐந்தாவது இறுதிக்கடமையான ஹஜ் கடமையை நிறைவேற்ற அரேபியா நாட்டில் மக்கா நகரிலுள்ள கஃபா இறையில்லம் நோக்கிச்செல்ல வேண்டிய இன்றியமையா நிலை.

சாதாரணமாக ‘தேவையே ஆய்வுக்குத் தாய்’ (Necessity is the mother of inventions) எனக் கூறுவர்.