பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/59

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

49

இதன்படி, உலகெங்கும் வாழும் முஸ்லிம்கள் ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல்லும்போது தாங்கள் எந்த எந்தக் கடல்களைக் கடந்து செல்ல வேண்டும்; எந்த எந்த நாடுகளின் நிலப் பகுதிகளை, நீர்ப் பகுதிகளைக் கடந்து செல்ல வேண்டும்: ஆங்காங்குள்ள நில, நீர் நிலைமைகளையும் தட்ப வெப்ப நிலைகளையும், பாலைகள் மலைகள், காடுகள் பற்றிய தகவல்களையும், அவற்றினூடே செல்லக்கூடிய வழித்தடங்களையும் கண்டறிந்து செல்ல வேண்டிய கட்டாயச் சூழ்நிலை.

காலப்போக்கில் இஸ்லாம் பரவிய நாடுகளிலெல்லாம் இஸ்லாமிய ஆட்சியும் உருவாகியது. இந்நாடுகளிடையே வணிகத் தொடர்புகள் அதிகரிக்க பூகோள அறிவு வளர்ச்சி அத்தியாவசியமாகியது. எனவே, தனிப்பட்டவர்களும் அரசுத் தலைவர்களும் பூகோள அறிவு வளர்ச்சியிலே ஆர்வமும் முனைப்பும் காட்டினர்.

ஏழாம் நூற்றாண்டில் இந்தியா வந்த அரபிகள்

முஸ்லிம்களின் பூகோள அறிவு வளர்ச்சிக்கு அவர்கள் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டது பேருதவியாயமைந்தது. ஏழாம் நூற்றாண்டிலேயே கிழக்கே இந்தியாவுக்கும் சீனாவுக்கும் நிலம், நீர் வழியாகச் சென்றார்கள் என்ற குறிப்பு வரலாற்றில் காணக்கிடக்கிறது. தெற்கே ஆஃப்ரிக்காவின் தென்கோடிவரை சென்றுள்ளார்கள். மேற்கே கோனரித் தீவுகளுக்கும் வடக்கே ரஷ்யாவுக்கும் சென்றதாக வரலாறு கூறுகிறது. இன்னும் பால்டிக் நாடுகளும் ஐஸ்லாந்துக்கும்கூட அக்கால முஸ்லிம்கள் சென்று வந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் காணப்படுகின்றன.

4