பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/63

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

53


உலகம் உருண்டை என்பதை கலிலியோவுக்கு முன்னதாகக் கண்டறிந்து கூறிய அல் பிரூனி, உலகத்தின் சுற்றளவை அளப்பதற்கு வியக்கத்தக்கதோர் எளிய வாய்பாடை முதன் முதல் வகுத்தளித்தார்.

மேலும், சூரியனைச் சுற்றி உலகம் சுழலுவது இயற்கையாக நிகழும் நிகழ்வே என்பதையும் அல் பிரூனி எண்பித்தார் புவியியல் ஊழிகள் ஒன்று மற்றொன்றைத் தொடர்ந்து தோன்றும் சுழல் வட்டம் என்பதைக் காரணகாரியங்களோடு விளக்கினார். இவ்வாறு இவர் தமது சமகாலத்திய அறிஞர்களைவிட காலத்தால் முற்பட்ட நோக்கும் போக்கும் உடையவராக விளங்கினார்.

கடல் அலைகள் மீது முழு நிலாவின் தாக்குறவைப் பற்றி அல் பிரூனி வெளியிட்டுள்ள கருத்துக்கள் பூரணச் சந்திர பெளர்ணமியன்று கடல் பொங்கிக் கொந்தளிப்பதற்கு இன்று என்னென்ன விஞ்ஞானக் கருத்துக்கள் கூறப்படுகின்றனவோ அவற்றை அப்படியே அன்றே பிரதி பலிப்பதாய் அமைந்திருந்தன என்பது வியப்பளிக்கு உண்மையாகும்

காபாவை நோக்கி

இஸ்லாமிய உலகிலுள்ள சுமார் 60 முக்கிய நகரப்பகுதிகள் அவற்றின் அட்சரேகை, மகரரேகைப் பட்டியலை அல் பிரூனி தயாரித்ததன் பயனாக மக்காவிலுள்ள காபா இறையில்லத்தை நோக்கி முறையாகத் திசை அறியதொழ முடிகிறது. இவ்வாறு துல்லியமாகத் திசை அறிய வழி கண்டதன் மூலம் புதிதாக மசூதிகள் கட்டும்போது சரியான திக்கில் 'மிஹ்ராப்' அமைக்க உலகெங்கும் உள்ள முஸ்லிம்களால் முடிந்தது.