பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/82

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

அறிஞர்கள் - பயணிகளிடமிருந்தெல்லாம் செய்திகளைச் சேகரித்தார். அவரை இந்தியாவைப் பற்றி எழுப்பட்டிருந்த நூல்களையும் குறிப்புகளையும் படித்தறிந்தார்.அதன்பின் ஒரு முறை இருமுறை அல்ல பலமுறை இந்தியா சென்று வந்தார்.

சம்ஸ்கிருதப் புலமை பெற்ற முஸ்லிம் மேதை

இந்திய ஆய்வில் முழுமை பெற விரும்பிய அல் - பிரூனி தம் நாற்பதாவது வயதில் சம்ஸ்கிருத மொழியைக் கற்றுக்கொண்டார். அதில் அவர் நல்ல பாண்டித்தியமும் பெற்றார். இந்தியா பற்றி இவர் எழுதிய 'இந்தியா' என்ற பெரு நூலே பிற்காலத்தில் மேலை நாட்டார் இந்தியாவைப் பற்றித் தெளிவாகவும் முழுமையாகவும் தெரிந்து கொள்ள வழி வகுத்தது. இவர் மூலமே ஹிந்து சமயக் கருத்துக்களும் இந்தியர் கணிதம், வானவியல் போன்ற அறிவியல் துறைகளில் பெற்றிருந்த அறிவாற்றலும் மேலை உலகை எட்டியது.

இவர் யூக்ளிடின் ‘அடிப்படைகள்’ (Elements) என்ற நூலையும் தமது வானவியல் ஆராய்ச்சி நூலையும் சம்ஸ்கிருத மொழியில் பெயர்த்தளித்துள்ளார்.

யானைச் சுமை வெள்ளிப் பரிசை ஒதுக்கித் தள்ளிய அறிவியல் நெடும்பயணம்

கஜினி முஹம்மவுக்குப்பின் அரியணையேறிய அவர் மகன் மஸ்து கஜினி அறிவாற்றல் மிக்கவர். விஞ்ஞான உணர்வு கொண்டவர். அல்-பிரூனியின் பலதுறைப்பேரறிவைக் கண்டு வியந்து, தன் அரசவை அறிஞர் குழாமோடு இணைத்துக் கொள்ள விரும்பி, யானைச் சுமை வெள்ளிக்குவியலைப் பரிசாக அனுப்பி அழைத்தார். இதைக் கண்ட அல்-பிரூனி‘இப்பரிசு, என்னை அறிவியல் ஆராய்ச்சியிலிருந்து தவறி நெறி பிறழச் செய்யும் விரைவில் வெள்ளிக்