பக்கம்:அண்ணாவின் ஆறு கதைகள்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாமா விஜயம்

39


மகள், சிறு நகையுடன், “அம்மாவே அம்மா! எங்கள் அம்மா கிரேதா யுகத்திலே பிறந்து வளர்ந்தவர்கள். ஏனம்மா அண்டை வீட்டு அகிலாண்டம், எந்த அரசமரத்தைச் சுற்றினார்கள், எனக்குக் காட்டமாட்டீர்களா? பக்கத்து வீட்டு பாலம்மா, புற்றுக்குப் பால் ஊற்றவே ஒரு மாடு வாங்கலே” என்று கேட்டு கேலிசெய்து சிரிப்பாள், பாமா!

“நீ போடி அம்மா ! போக்கிரி. அரசமரம், ஆலமரம் இதெல்லாம் என்ன என்று உனக்கென்னடி தெரியும் பவுடரும், ரிப்பனும் வராத காலத்திலே, வேப்ப மரத்து பெருமை எல்லோருக்கும் தெரிந்துதான் இருந்தது. உங்க அப்பா இருக்கச்சே, இந்த வீடு கோயில் மாதிரி இருக்கும் தெரியுமா! நீ பிறந்துதான் அவரையும் உருட்டிவிட்டே. யாரும் இப்போ இங்கே வரக்கூடப் பயப்படுகிறார்கள். வேலாத்தம்மன் கோயில் பூசாரி, நேத்து நீ தூங்கிக்கொண்டு இருக்கும்போது வந்தான். இளநீர் அபிஷேகம் செய்யணுமாம். அம்மாவுக்கு? என்றான்.”

“கொடுத்தனுப்பினாயா? அம்மா, பத்தா ஐந்தா, எவ்வளவு ரூபாயம்மா கொடுத்தாய்?” என்பாள் பாமா.

“பாமா பொல்லாத பெண். அது என்னென்னமோ புத்தகம் படித்துவிட்டு, எதுக்குப் பார்த்தாலும் காரணம் கேட்கிறாள்” என்று பாமாவின் தாயார், புரோகிதர் சுப்பய்யரிடம் சொல்வதுண்டு.

சுப்பய்யர் அந்த ஊர் புரோகிதர். அந்த வட்டாரத்திலே இருந்த எல்லா பணக்காரர் குடும்பத்தையும், அவருடைய பஞ்சாங்கத்தினுள்ளே சுருட்டிமடக்கி வைத்துக் கொண்டிருந்தார். எஸ்டேட் விஷயமுதற்கொண்டு. வீட்டிலே எருமை வாங்குகிற விஷயம் வரையிலே, சுப்பு சாஸ்திரியைக் கலக்காமல் ஒரு காரியமும் நடப்பதில்லை. ஐயருக்கு அவ்வளவு செல்வாக்கு.

காலையிலே குளித்துவிட்டு, விபூதி பூசி, கட்கத்திலே பஞ்சாங்கக் கட்டை வைத்துக்கொண்டு ஐயர் வெளியே