பக்கம்:அண்ணாவின் சட்டசபைச் சொற்பொழிவுகள்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

சியில் இருந்து பேசிய உறுப்பினர்கள் எல்லாம் எங்களைப் பார்த்து "குறைகளையே அடுக்கிக்கொண்டிருக்கிறீர்களே. குறை சொல்ல நீங்கள் யார்?" எனக் கேட்டு விட்டு, "அந்த உரிமை எங்களுக்குத்தான் உண்டு" என்பதுபோல கவர்னர் பெருமகனாரின் உரையில் குறைகளையே பொறுக்கினார்கள். அவர்களுடைய ஜனநாயகப் பண்பு உண்மையிலேயே வளரவேண்டும் என்று நான் பெரிதும் விரும்புகிறேன். அப்படி வளருமானால் எங்கள் வேலைகளும், தொல்லைகளும் பெரும்பாலும் குறைந்துவிடும் என்று கருதுகிறேன்.

அந்தக் கட்சியில் உள்ள பலர் நிர்வாகத்திலுள்ள குற்றங்குறைகளைத் தாங்கள் எடுத்துக் கூறுவதற்கு காரணமாக சில தத்துவார்த்தங்களை கற்பித்துக் கொண்டு பேசினார்கள். "இப்படி எல்லாம் நாங்கள் குறைசொன்னால்தான் மக்களுடைய ஆதரவு எங்களுக்கு இருந்து கொண்டிருக்கும். திரும்பவும் அவர்களிடத்தில் சென்று குற்றங்களை எடுத்துச் சொல்லி கண்டித்து பேசியிருக்கின்றோம்" என்று சொல்லி வோட்டுப்பெற்று வருவதற்குச் சௌகர்யமாக இருக்கும் என்று சொல்லிக் கொண்டார்கள். அப்படிப்பட்ட கருத்தைத் தெரிவித்துக்கொண்ட அங்கத்தினர்களுக்கு நான் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அப்படியெல்லாம் நடந்து தேர்தலிலே மக்களுடைய ஆதரவைப் பெற வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. காரணம் தாய்த் திருநாட்டை அடிமைத் தளையிலிருந்து விடுவிக்கும் ஆற்றல் படைத்த ஒரே ஒரு சிறுபடை நாங்கள்தான் என்ற முறையில் அவர்களுடைய ஆதரவைக்காட்டி தங்கள் வாக்குரிமையை எங்களுக்கு அளித்திருக்கிறார்கள். இனியும் அவர்களுடைய வாக்குகளைப் பெறுவதற்குரிய அன்பை நாங்கள் இழந்துவிடவில்லை. இழந்துவிடவும் மாட்டோம். இங்கே நடைபெறுகின்ற காரியங்கள் எல்லாம் எங்களுடைய குறிக்கோளைக் குந்தகப்படுத்திவிடாது.

ஆகையினால்தான் குற்றங்குறைகளை எடுத்துச்சொல்லி மக்களின் ஆதரவைப் பெறவேண்டுமென்ற நோக்கத்தோடு நாங்கள் குறைகளை எடுத்துக்காட்டவில்லை. உண்மையிலே இந்த அரசாங்கத்தார் தங்களுடைய திட்டவட்டமான கொள்கை எதையும் எந்தப் பிரச்னையின் மீதும், கவர்னர் உரையிலே வெளிப்படுத்தவில்லை என்பதை எடுத்துக்காட்ட விரும்புகிறேன்.

உதாரணமாக நிலச் சீர்திருத்தத்தைப்பற்றி அவர்கள் குறிப்பிடுகின்ற நேரத்தில் ஸ்ரீ வினோபாவின் பூதான இயக்கத்தைச்