பக்கம்:அண்ணாவின் சட்டசபைச் சொற்பொழிவுகள்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21

பட்டாளத்தார் டாங்குகளை ஓட்டிக்கொண்டு வருவதைப்போல. எங்களையும் நம்முடைய ஆளும் கட்சியினர் "sappers and Miners" ஐப் போல் பயன்படுத்திக்கொண்டால், கள்ளிக் காளான்களை அகற்றும் காரியங்களில் எங்களை ஈடுபடுத்திக்கொண்டால், எங்கள் கரத்தில், கருத்தில் அல்ல, அழுக்கேறினாலும் அதைப்பற்றி நாங்கள் கவலைப்படாமல், அவர்களுக்குப் பாதைகளைச் சரிப்படுத்தி வைப்போம். மத்திய சர்க்காரிலே இருக்கும் அதிகாரங்களை மாகாண சர்க்காருக்கு மாற்றுவதற்கு அவர்கள் எங்களை மெத்தப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்ளுகிறேன்.

அதே முறையில், நாங்கள் சர்க்கார் செய்யும் எந்தக் காரியத்தையும் அல்லது அவர்கள் செய்திருக்கின்ற எந்தக் காரியத்தையும் குறைத்து மதிப்பிடுபவர்கள் அல்ல. உண்மையிலேயே சில பல நாட்களாக நம்முடைய மதுவிலக்குத் திட்டத்தை அமுல் நடத்த வேண்டுமென்பதற்காக போலீஸ் மந்திரி அவர்கள் எடுத்துக்கொண்டிருக்கும் தீவிர நடவடிக்கைகளைப் பத்திரிகையில் பார்க்கும் நேரத்தில், இவ்வளவு தீவிரமாக மதுவிலக்கை அமுல் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க இந்தச் சர்க்கார் முன்வந்திருப்பதை நான் உண்மையிலேயே பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன் அப்படி பாராட்டுகிற நேரத்தில் ஒன்றைச் சொன்னால், மறுபடியும் குறை சொல்கிறேன் என்று ஆளும் கட்சியார் வருத்தப்படக் கூடாது. இவ்வளவு குற்றங்கள் இருந்தும் முன்னாலேயே தீர்க்க முற்படாதது ஏன்? என்று கேட்பதற்கு என் பேதை நெஞ்சம் தூண்டுகிறது. ஆகவே, மதுவிலக்கைச் சரிவர அமுல் நடத்த எடுத்துக் கொள்ளும் முயற்சியை நான் பாராட்டுகிறேன்.

அதைப் போலவே, சமுதாய நலத்திட்டத்தை நம்முடைய மாகாண முதல் அமைச்சர் அவர்கள் தம்முடைய சொந்தப் பொறுப்பில் ஏற்றுக்கொண்டிருப்பதை நான் மனதாரப் பாராட்டுகிறேன். தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளுக்குக் கருத்து வேற்றுமைகள் இருந்தாலும், நம்முடைய முதலமைச்சர் அவர்கள் நாட்டு மக்களுக்குத் தேவையான காரியங்களைச் செய்ய வேண்டுமென்ற........செய்கிறார்கள் என்று அல்ல...... செய்ய வேண்டுமென்ற அக்கறை கொண்டவர்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆகையால், அவரிடத்தில் இந்த இலாகா ஒப்படைக்கப் பட்டிருப்பதைப் பற்றி நான் உண்மையிலேயே

3