பக்கம்:அண்ணாவின் சட்டசபைச் சொற்பொழிவுகள்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

கின்றன. இந்த நாற்பத்தைந்து நாடுகளில் நடந்து வருகின்ற சமுதாய நலத்திட்டத்தில் எவ்வளவு வெற்றி கிடைத்திருக்கிறதோ அதற்குச் சமமான வெற்றி நம் நாட்டிலும் கிடைத்திருக்கிறதா என்று பார்க்கவேண்டுமே தவிர 'எத்தனை கிணறுகள் வெட்டப்பட்டிருக்கின்றன" என்றோ, அல்லது அம்மையார் கூறியபடி எங்களை எல்லாம் "எங்களுடைய கிராமங்களுக்கு வந்து பாருங்கள்" என்று அழைப்பதாலோ மட்டும் பயன் இல்லை. இந்த வகையில் இந்தத் திட்டங்களின் மதிப்பீடு அமையவேண்டும்.

உணவுப் பிரச்னையைப் பொறுத்த வரையிலும்கூட, திட்டக் கமிஷனின் தலைவர் ஸ்ரீ வி. டி. கிருஷ்ணமாச்சாரியார் தெளிவாக சொல்லி இருக்கிறார்கள், "மாகாண சர்க்கார் தாம் போட்ட திட்டங்களில் இருந்து தவறி இருக்கிறார்கள்" என்று. ஆகவே "இதுவரையிலும் போட்ட திட்டங்களும் சரியாக நிறைவேற்றப்படவில்லை. எங்கள் கொள்கைகளையும் விளக்க மாட்டோம்" என்று சொல்வது "நாங்கள் எண்ணிக்கையில் பெருத்தவர்கள். நீங்கள் குறைந்தவர்கள். அடங்கிக் கிடவுங்கள் "என்பதாக இருக்கிறது." அவர்களுக்கு நான் சொல்வது என்னவென்றால் பேரழிவு என்ற ஒன்றுக்குப் பிறகு மக்களுடைய பேரெழுச்சி என்ற ஒன்று இருக்கிறது அது நல்ல தீர்ப்பு அளிக்கும். அந்தத் தீர்ப்பு காலம் கடந்து கிடைத்தாலும் நிச்சயமாகக் கிடைக்கும். அப்படிச் சொல்கின்ற போது “பேசுகின்ற உரிமை உங்களுக்குத் தந்ததாலே இப்படி எல்லாம் பேசுகிறீர்கள்" என்று எடுத்துச் சொன்னார்கள். அப்போது என் மனக்கண் முன் ஸ்ரீ சத்தியமூர்த்தி தோன்றுகிறார். பிரிட்டிஷாரின் ஆட்சி நடந்த காலத்தில் தன்னந்தனியாக நின்று போராடிய நேரத்திலே இதே கோட்டையில் இருந்துதான் "உங்களுக்குப் பேச்சுச் சுதந்திரம் கொடுத்திருக்கிறோம், அப்படிப் பேசினீர்கள்" என்று அவர்கள் சொன்னார்கள். அதே கோட்டை இன்று ஆளும் கட்சியாக இருக்கின்ற காங்கிரஸ்காரர்களுக்கு வந்திருக்கிறது. "பேச்சுச் சுதந்திரம் கொடுத்தோம். நீங்கள் எங்கள் சுதந்திரத்தைப் பறித்து விட்டீர்கள்" என்று அன்றைக்குச் சொன்ன பிரிட்டிஷ்காரர்கள் தேம்ஸ் கரையில் நிற்கிறார்கள். இங்கு கூவம் நதிக் கரையில் நின்று கொண்டு அதே பழைய தத்துவத்தில் நீங்கள் உழன்று கொண்டிருக்க வேண்டாம் என்று சொல்லிக்கொண்டு முடித்துக் கொள்கிறேன்.

🞸🞸🞸🞸