25
4—7—57]
[வியாழக்கிழமை
- [(1957-58) வரவு செலவு திட்டத்தின் மீது எழுந்த விவாதத்தில்]
- பிற்பகல் 1—37
சட்டமன்றத் தலைவர் அவர்களே,
நமது மாகாண நிதியமைச்சர் அவர்கள் இந்த மன்றத்தின் முன்னிலையில் விவாதத்திற்காக வைத்திருக்கிற வரவு செலவுத் திட்டத்தைப் பரிசீலனை செய்து பார்க்கிற பொறுப்பு எல்லாக் கட்சிகளுக்கும் இருப்பதைப் போலவே திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் இருப்பதினாலேயும் அதிலே கலந்து கொள்கிற வாய்ப்பு எனக்கு ஏற்பட்டதில் உண்மையில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த வரவு செலவுத் திட்டத்தை ஆராய்வதற்கு முன்னால் இந்த வரவு செலவுத் திட்டம் எந்த நேரத்திலே நம்மிடத்தில் தரப்பட்டிருக்கிறது என்பதை ஆராய்வது அதனுடைய தன்மைகளை உண்மையில் புரிந்து கொள்வதற்கு மெத்த உதவியாயிருக்கும் என்று கருதுகிறேன், அப்படி ஆராய்வதில் நமக்கு சாதகமான சூழ்நிலைகள் மொத்தம் எவ்வளவு இருக்கின்றன? இயற்கை நமக்கு இவ்வாண்டு உதவி புரிந்திருக்கிறது என்பதை நிதி அமைச்சர் அவர்கள் மகிழ்ச்சியோடு தெரிவித்திருக்கின்றார்கள். இந்த நாட்டு மக்களிடையே எத்தனையோ மாதிரியான மனக் குமுறல்கள் இருந்தாலும் இந்த நிமிடம்வரை சட்டங்களுக்கு அடங்கி நடக்கிற பொறுப்புள்ள குடிமக்களாக இருந்துகொண்டு, கேட்கின்ற வரிகளை எல்லாம் அவர்கள் தருகிறார்கள். தீட்டப்படுகிற சட்டங்களுக்கு மதிப்பளிக்கிறார்கள், இது நல்ல சூழ்நிலைதான். அதே போன்று நம் நாட்டில் இருக்கிற பத்தரிகைகளில் பெரும்பாலானவை நிர்வாகத்திலே, திட்டங்களிலே, கொள்கைகளிலே எந்தமாதிரி குறைபாடுகள் இருந்தாலும், வலிவோ, பொலிவோ குறைந்திருந்தாலும் அந்தப் பொலிவினை அவர்கள் இழந்துவிடுகிற நேரத்திலே, நல்ல வர்ணப் பூச்சிகளாக அவைகளைக் காட்சி அளிக்கும்படிச் செய்து இன்றைய தினம் ஆதரவு அளித்து வருகின்றது. இது மட்டுமல்ல, நிர்வாகத் திறமையும், நல்ல நம்பிக்கை பெற்றவர்களையும், திறமை படைத்த அமைச்சர்களையும் பொதுவாழ்விற்கென்று தன்னை ஒப்படைத்துவிட்டு அதைத் தன் கட்சி தவிர வேறு எந்த கட்சியாலும் சாதிக்க முடியாதென்று நம்பிக்கொண்டிருக்கிற, தங்கள் கட்சியை எதிர்க்கிறவர்கள் சிலரை அணைத்து அழித்தும் சிலரை ஒழித்தும் கட்டத் திட்டமிடும் திரு. காமராஜின் தலைமையில் இன்றைய மந்திரி சபை