பக்கம்:அண்ணாவின் சட்டசபைச் சொற்பொழிவுகள்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

இருக்கிறது. அது மாத்திரவல்ல, இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் பார்த்துப் பாடம் பெறக்கூடிய வகையில் நல்ல திறமை வாய்ந்த அதிகார இயந்திரம் நம்மிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது அதனால் "ஆனால்" என்ற அருவருப்பான சொல்லை நானாகத் தேடிக்கொள்ளவில்லை; அது தானாகவே துரத்திக்கொண்டு வருகிறது, ஆனால் இவ்வளவு நல்ல சூழ்நிலைக்குப் பிறகும் விலைவாசிகள் ஏறியிருக்கிறது, வேலையில்லாத் திண்டாட்டம் தலை விரித்து ஆடுகிறது நம் நாட்டில். நாட்டில் பற்றுக்குறை எல்லாத் திக்கிலும் துரத்திக்கொண்டு இருக்கிறது. சர்க்கார் அலுவலகங்களில் பணியாற்றுகிறவர்கள், சர்க்கார் துணை அலுவலகங்களில் பணியாற்றுகிறவர்கள் அத்தனைபேர்களும் இன்றைய தினம் மனக்குறையோடு தான் இருக்கிறார்கள். அதைப்போக்க நல்ல சூழ்நிலை நம்மிடம் உருவாக்கப்படுவதில்லை. இந்த நிலையில் அலுவலகத் துறையிலுள்ளவர்கள் சர்க்காருடைய உதவியை பெற்றிருக்கிறார்கள் என்று வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறதே, அப்படி அலுவலகத் துறையிலுள்ளவர்கள் யாரும் மனத்திருப்தியோடு இல்லை என்பதை அமைச்சரவர்கள் அறிந்திருப்பார்கள் என்று கருதுகிறேன். நான் இதை நினைவூட்டுவது அவர்கள் பேரில் வைத்திருக்கும் அன்பையும், அபிமானத்தையும் அதிகப்படுத்துவதற்கே தவிர குறை கூறுவதற்கல்ல. குறை கூறுவதற்கு இருக்கின்ற பல காரியங்களைப்பற்றி இம்மன்றத்தில் விளக்கமாகப் பேசப்பட்டது என்று மரியாதையாகச் சொல்லுகிறேன். இம் மன்றம் ஒவ்வொருவரும் தங்களுடைய பேச்சுத்திறமையை காட்டிக்கொள்வதற்காக கூட்டப்படவில்லை ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரியங்களையும் பற்றிக் கூறுவார்கள், அதற்கு திருப்பி பதில் அளிப்பது இதுதான் இங்கே நடந்தது—ஆனால் அவ்விதம் இருத்தல் கூடாது என்று மன்ற உறுப்பினர்களுக்கும் எனக்கும் நானே கவனமூட்டிக்கொள்கிறேன். ஆனால் எதிர்க் கட்சியிலுள்ளவர்கள் அத்தனை காரணங்களையும் காட்டி முறைப்படி குற்றம் சாட்டுகிறார்கள். காரணம் ஒரு கொள்கையை கடைப்பிடித்து அதன்படி நின்று தக்க ஆதாரங்களுடன், கட்டுப்பாடுடன். கண்ணியத்துடன், எடுத்துரைப்பதற்குள்ள தகுதி எதிர்க்கட்சிக்காரர்களிடம் குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகத்தாரிடம் இருக்கிறது. இந்திய துணை கண்டமதன் மற்ற சட்டசபைகளில் எல்லாம் என்ன நடந்துகொண்டிருக்கின்றன என்பதை நான் இந்த மன்றத்திற்கு கவனமூட்ட