பக்கம்:அண்ணாவின் சட்டசபைச் சொற்பொழிவுகள்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27

விரும்புகிறேன். சில நாட்களுக்கு முன்னால் பத்திரிகையில் பார்த்தோம் தேர்தலில் தோற்றுப்போன ஒருவர் கவர்னராக பதவி பெற்று சட்டசபையில் வந்து ஆற்றிய உரையை எதிர்த்து பெரிய அமளி நடைபெற்றிருக்கின்றது. நம்முடைய மாகாணத்தில் பெருமையாகவும் திறமையாகவும் தம்முடைய பதவியை நிர்வகித்து கொண்டிருந்த கவர்னர் பிரகாசா அவர்கள் பம்பாய் சட்ட மன்றத்தில் தன்னுடைய உரையை நிகழ்த்துவதற்காக சென்ற நேரத்தில் இரு மொழி இராஜ்யம் வேண்டாம் என்ற காரணத்தைக் காட்டி சட்ட சபையில் ஒரு பெரிய அமளி நடைபெற்றிருக்கின்றது. எல்லாவற்றையும் விட மேலாக, சபா நாயகர் அவர்களே, ராஜஸ்தான சட்டசபையிலே திரிலோகசிங் என்பவர் சபாநாயகர் வெளியே போயிருக்கிற சமயம் பார்த்து சபாநாயகருடைய இருப்பிடத்திலே ஏறி இருந்துகொண்டு அகல மாட்டேன் என்றார். இத்தனை சம்பவங்கள் எல்லாம் மற்ற சட்டசபைகளில் நடக்கின்ற இந்தச் சமயத்தில், இங்கு கட்டுப்பாடோடு, கண்ணியத்தோடு, பாசத்தோடு நடந்துகொள்ளுகிற எங்களுடைய தன்மையை நீங்கள் உணர்ந்துகொள்ள மறுக்கின்றீர்கள், அதோடு எங்களைப்பற்றி கண்டித்து குறையும் கூறி வருகிறீர்கள் என்றால், நீங்கள் எங்களை நான் முன்னால் குறிப்பிட்ட அந்த பாதைக்குத் திருப்பி வருகின்றீர்கள் என்றுதான் அர்த்தம். நாங்கள் எப்போதும் ஜனநாயகத்தின் அடிப்படையிலே நின்றுதான் பணியாற்றுகிறோம். நீங்கள் ஆணவமாக வேண்டுமானால் கருதிக்கொள்ளலாம். நாங்கள் இந்த சபைக்கு வந்தது என்றைக்கும் எதிர் அங்கத்தினர்களாகவே இருப்பதற்காக நுழையவில்லை—இன்றைக்கில்லாவிட்டாலும் என்றைக்காவது ஒரு நாள் ஆட்சிப் பொறுப்பை ஏற்கத்தான் போகிறோம். (ஆரவாரம்.) ஆகவே நாங்கள் பொறுப்பை உணர்ந்திருக்கின்றோம். பொறுப்பற்ற முறையில் நாங்கள் நடந்துகொள்ள மாட்டோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். அடுத்தபடியாக இங்கு பல அங்கத்தினர்களும் தங்களுடைய குறைகளை எடுத்துச் சொன்னார்கள். அவர்கள் சொன்ன குறைபாடுகளையெல்லாம் நமது நிதி அமைச்சர் அவர்களுக்கு உதவிகரமாக இருக்கும் வகையில் ஒரு குறிப்பு எடுத்துவைத்திருக்கிறேன். யார் யார் எதை எதைச் சொன்னார்கள் என்றல்ல—என்னென்ன குறைபாடுகளைச் சுட்டிக் காட்டினார்கள் என்பதை குறித்து வைத்திருக்கின்றேன். ஒவ்வொருவரும் தங்களுடைய தொகுதியின் நிலைமைகளைப் பன்முறை எடுத்துச் சொல்லியும், அவைகள்