30
இதைத் துருவித்துருவிப் பார்த்தேன், காணவில்லை, இதில் கொள்கை விளக்கம் இல்லாததற்கு இரண்டு காரணம் காட்டப்படலாம், ஒன்று எங்களது கொள்கை உங்களுக்குத் தெரியாதா என்று கேட்பது, இன்னென்று பொருளாதாரத்தையும் அரசியல் சாஸ்திரத்தையும் சேர்த்துப் புள்ளி விவரங்களோடு தருகின்றேன், பார்—என்று சொல்லுவது, நான் பள்ளியில் இரண்டு பாடங்களையும் சேர்த்து ஒன்றாய்த்தான் படித்தேன் இருந்தும் இதில் கொள்கை விளக்கம் என்று ஒன்று இருப்பதாக எனக்குத் தெரியவில்லை, வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன், ஏனென்றால் உண்மையிலேயே இந்த வரவு செலவு திட்டத்தை நான் ஆராய்ந்த வரையிலும் இந்த வரவு செலவு திட்டத்தில் தரப்படுகின்ற விவரங்கள் எல்லாம் ஒரு குழுவின் கீழ் தயாராக்கப்படுகின்றன. இந்தக் குழுவினால் பரிசீலிக்கப்பட்ட மூன்று அம்சங்களைப் பார்த்தால்தான் இந்த வரவு செலவு திட்டத்தின் தாரதம்மியம் நன்றாக தெரியும்.
உதாரணமாக இன்றையதினம் கானடாவில் இம்மாதிரி வரவு செலவு திட்டத்தை ஆளும் கட்சியினர் கொண்டுவந்தால் உண்மையிலேயே அச்சத்தோடு கொண்டுவந்தார்கள் என்று கருதலாம். ஏனென்றால், அங்கே ஆளும் கட்சியினருக்கும் எதிர்க்கட்சியினருக்கும் இடையிலே உள்ள எண்ணிக்கையின் வித்தியாசம் 10, 12 தான், இன்றைய தினம் என்னுடைய கட்சியைப் பொறுத்தவரையில், ஆளும் கட்சியினர் நாங்கள் 15 பேர்கள்தான் இருக்கிறோம் என்று கூறுவார்கள். அதுமாத்திரமல்ல, எதிர்க் கட்சியிலுள்ள எல்லோரையும் கூட்டிச் சேர்த்துப் பார்த்தாலுங்கூட, கூட்டுவதும் சேர்ப்பதும் கடினம், அத்தனை பேர்களையும் காட்டிலும் 3 மடங்குக்கு மேல் அதிகமான பலமுள்ளவர்கள் ஆளும் கட்சியினர். அதனால் அவர்களுக்கு நிச்சயம் தெரியும். என்ன குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டாலும் என்ன ஒழுங்கீனங்கள் எடுத்து விளக்கப்பட்டாலும், எந்தக் கொள்கை விமர்சனம் செய்யப்பட்டாலும், இன்றுதானே பேசப் போகிறார்கள், பேசி என்ன காரியம் நடக்கப்போகிறது, என்ன ஆகிவிடப் போகிறது என்ற எண்ணம்; தோன்றியிருக்கக்கூடும். இந்த நம்பிக்கையின் பேரிலேயே இந்த வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப் பட்டிருக்கிறது என்று நான் கருதுகிறேன், எங்கள் எண்ணிக்கையை மட்டும் கருதாமல், எண்ணத்தைத் கருத்தில் கொள்ளவேண்டுமென்று கேட்டுக்கொள்ளுகிறேன்.