பக்கம்:அண்ணாவின் சட்டசபைச் சொற்பொழிவுகள்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

39

இவைகள் மட்டும் அல்லாமல், 'Infact, all the available statistics tend to show that difference between the living standards of the richer and poorer sections instead of being narrowed down has increased further during the last 9 or 10 years." என்றும் அவர் சொல்லியிருக்கிறார்.

இப்பொழுது நான் இந்த மன்றத்தின் முன்னாலே, கனம் சபாநாயகர் அவர்களுடைய அனுமதியின் பேரில் கேட்டுக்கொள்வது என்னவென்றால், முதல் ஐத்தாண்டுத் திட்டத்தில் இந்த அளவு மக்களை ஏமாற வைத்திருக்கிறபோது அதே ஏழை மக்களை வரி கொடுக்கச் சொல்லிக் கேட்பதில் என்ன பயன்? ஆகையினால். வரி யாருக்குப் போடுகிறார்கள் என்பதைப் பொறுத்தும், எப்படிச் செலவழிக்கிறார்கள் என்பதைப் பொறுத்தும் இந்த பட்ஜெட்டைப்பற்றி தீர்மானிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.

ஐந்தாவது பாராவில், நிதி அமைச்சர் அவர்கள். "விலைவாசிகள் ஏறுமுகம், அன்னியச் செலாவணிக் குறைவு இவை இரண்டுமே நாட்டின் பொருளாதார நிலைமையை இன்று பாதிக்கும் பெரும் சிக்கல்கள்" என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறார். இதை மறுப்பவர்கள் உண்மையை மறைப்பவர்கள் ஆவர். இன்றைய தினம், உண்மையில் இரண்டு பெரிய குறைகள் இருக்கின்றன. ஒன்று, விலைவாசி ஏறுமுகம்; மற்றொன்று அன்னியச் செலாவணிக் குறைவு. ஆனால், நான் வருத்தத்தோடு தெரிவித்துக்கொள்ள விரும்புவது என்னவென்றால், இந்த இரண்டுக்கும் நல்ல பரிகாரங்கள் தேடுகிற திறமை, நம்முடைய நிதி அமைச்சர் அவர்களுக்கு நிச்சயமாக உண்டு ஆனால், இந்த இரண்டுக்கும் அவருடைய நேரடியான மேற்பார்வையிலே. நேரடியான நிர்வாகத்திலே அவரிடம் ஒப்படைக்கப்படவில்லை. அகில இந்தியாவில் இருக்கும் நிலைமைகளைப் பொறுத்துத்தான் விலைவாசி ஏறுமுகம், அன்னியச் செலாவணிக் குறைவு ஆகிய இரண்டு சிக்கல்களையும் தீர்க்க முடியும். இதனை அவர்கள் நன்றாக உணர்ந்திருக்கிற காரணத்தால், நாம் இவைகளை இங்கும் தீர்க்கப் போகிறோம் என்று எடுத்துச்சொல்லி, தங்களால் செய்யக்கூடிய சில பல காரியங்களைச் சொல்லியிருக்கிறார். அதற்காக, அவர்களைப் பாராட்ட வேண்டும் என்று கனம் அங்கத்தினர்களெல்லாம் விரும்பினார்கள். ஒரு அங்கத்தினர் அவர்கள் உருக்கமாகக் கேட்டார்கள். ஒன்றுகூட நல்லது சொல்ல மாட்டீர்களா?" என்று, நாங்கள் நஷ்டம் அடை-