பக்கம்:அண்ணாவின் சொல்லாரம்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14


மதுவிலக்கு, விசைத்தறி ஆகிய இரண்டிலும் இந்திய அரசு நாடு முழுவதும் ஒரேவிதமான கொள்கையை அமுலாக்க வேண்டும்.

சில அண்டை மாநிலங்களில் மதுவிலக்கைத் தளர்த்த நடக்கும் முயற்சிகளில் மத்திய அரசு தனது கடமையைச் செய்யவில்லை.

எல்லாக் கட்சிகளும் ஏற்று நடத்தவேண்டிய காந்தீயக் கோட்பாடுகளில் ஒன்றாக மதுவிலக்கை ஒப்புக் கொண்டிருக்கிறோம்! சென்னை அதை உள்ளத்தூய்மையுடன் சட்டபூர்வமாக்கி வருகிறது!

எனவே மற்ற மாநிலங்களும் மதுவிலக்கை அமுல் நடத்தச் செய்வது தான் மத்திய அரசின் கடமை. அண்டை மாநிலங்கள் தளர்த்தினால் இங்கிருப்பவர்களுக்குச் சபலம் ஏற்படுகிறது. அதனால் பிரச்சினைகளும் கிளம்புகின்றன.

இது நாணயமாக நடப்பவனுக்குத் தண்டனையும் அக்கிரமக்காரனுக்குப் பரிசும் கொடுப்பது போலிருக்கிறது.

மதுவிலக்கு ஒரு பெரிய சமுதாயநலத் திட்டம் என்பது என் கருத்து.

அதனால் மக்கள் எவ்வளவோ நன்மையடைந்திருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது; மறைக்கவும் முடியாது.

குடித்துவிட்டுத் தெருக்களில் குத்துச்சண்டை போடுவதையும் வீடுகளில் பெண்களை அடிப்பதையும் நான் சின்ன வயதில் பார்த்திருக்கிறேன். மதுவிலக்குக் கொண்டு வந்ததால் அவை யெல்லாம் மறைந்தொழிந்து விட்டன. பெண்களெல்லாம் வீட்டில் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள்.

தமிழகத்தில் மதுவிலக்கு இருக்கிறது; ஆந்திராவில் கள்ளுக் கடைகளைத் திறக்கப் போவதாகப் படித்தேன். பம்பாயில் அரசாங்கமே பீர்க்கடை திறந்திருக்கிறது!