பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

87


லாம் ஒருசிலரின் தன்னல மேம்பாட்டிற்குத்தானென்றால், அதனால் ஒரு பயனுமேற்படாது.

இந்த வளமை மக்கள் வாழ்வை உரிமை வாழ் வாகப் புதுமை வாழ்வாக, முழுமை வாழ்வாக, ஆக்கிட வேண்டும்.

செயலாற்றல் மிக்கவர்கள் நம் தொழிலதிபர்கள். இவர்களைச் செங்கற்கள் என்றால், இவர்களைக் கொண்டு கட்டிடம் உருவாக்கப் பயன்படுகிற சிமிண்டாக உலக நாட்டார் விளங்கிடவேண்டும். சிமிண்ட் என்றுதான் சொன்னேன். உதவி, கடன் என்றெல்லாம் அதை நான் அழைக்கவில்லை.

உலகில் எல்லோரும் வளமைபெற உதவிட வேண்டியது மேம்பாடு அடைந்த நாடுகளின் கடமையாகும். நாடுகள் பல வளர்ச்சி யடையாத ஒரு நிலையில், பொருள்களை ஏராளமாக மேம்பாடு அடைந்த நாடுகள் உற்பத்தி செய்து குவிக்குமானால், அவற்றை வாங்கிடுவார் யார்?

இந்தியா போன்ற நாடுகள் வளம் பெற கை கொடுத்து உதவ வேண்டும். வெண்டல் வில்கி என்னும் அமெரிக்கப் பெருமகன் ஒருலகம் என்று சிந்தித்துக் கருத்தை எடுத்துரைக்கிறார். இதை மனத்தில் கொள்ள வேண்டும். உலகில் உள்ள இயற்கை வளம் அனைத்தும் மனித இன முழுமையில் பயனளிக்கும் வகையில் திட்டமிட்டுச் செயற்பட வேண்டும்.