பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13


இப்பொழுதுள்ள மாணவர்களைப் பத்து இருபது ஆண்டுகளுக்கு முன்புள்ள மாணவர்களோடு ஒப்பிட்டுப் பேசும்போது, 'அந்த மாணவர்கள் சிறந்தவர்கள்’ என்று சொல்வார்கள். ஆனால், அந்த மாணவர்கள் காலத்தில், அவர்களுக்கு முந்திய காலத்தில் இருந்தவர்கள்தான் சிறந்தவர்கள் என்று சொன்னர்கள்.

“கல்வியின் தரங் குறைந்து விட்டது” என்று கூறுகிறார்கள். உண்மை அதுவல்ல. தரத்தில் வேண்டுமானால் வேறுபாடு இருக்கலாம். ஆனால், முன்பு இருந்த நிலையைவிட, இப்போது கல்வியின் தரம் வெகுவாக உயர்ந்திருக்கிறது. எங்கள் பதவிக் காலத்தில் மேலும் கல்வியின் தரத்தை நிச்சயம் உயர்த்துவோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக, மற்ற மாநிலங்களைவிடத் தமிழ்நாடு கல்வியில் முன்நிற்கிறது என்னும் நற்பெயரை நாட்டப் பாடுபடுவோம்.

2

எல்லோரும் கல்லூரிப் படிப்பு வாய்ப்பு பெறும் பொருட்டு, இலவசப் புகுமுக வகுப்புப்படிப்பை அமுலாக்க வேண்டும் என்னும் எண்ணம் உலவுகிறது. ஆனால், போதுமான கல்லூரிகளைத் துவக்குவதும் அவற்றைத் துவக்க நிதி வசதிகளைக் காண்பதும் இடர்ப்பாடான சிக்கலாகும். இத்தகைய சிக்கல்களில் மாணவர்கள் சிந்தனையைச் செலுத்த வேண்டும். அவற்றை அலசி ஆராய வேண்டும். அப்போதுதான், தக்க சமயத்தில் தீர்வுகாண முடியும். மாணவர்கள் மாலை நேரங்களில் இத்தகைய பிரச்சினைகளைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். -