பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16


இந்தப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொண்டு மொழிப் பிரச்சினையைக் கவனிப்பதா, மொழிப் பிரச்சினையைத் தீர்த்த பிறகு இப்பிரச்சினைகள் மீது நடவடிக்கை எடுப்பதா என்பதை மாணவர்களே சொல்லட்டும்.

இங்கே பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மட்டும் இருந்தாலும், மாணவர் சமுதாயம் முழுவதையும் கேட்டுக் கொள்கிறேன். எந்தப் பிரச்சினைக்கு முதலில் முடிவுகாண வேண்டும் என்று நீங்களே சொல்லுங்கள். நேரிலே சொல்ல முடியா விட்டால் கடிதத்தின் வாயிலாகவாவது எழுதுங்கள்.

மொழிப் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியாவிட்டால் இந்த அரசு, பதவி விலகத் தயங்காது. இப்பொழுதுள்ள பிரச்சினைகளைத் தீர்த்துக் கொண்ட பின்னரே, மொழிப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான சூழ்நிலை உருவாக வேண்டும் என்று நினைக்கிறேன்.

இந்திப் பிரச்சினையில் மிகப் பிடிவாதமாக இருக்கும் ஜனசங்கத்தைச் சேர்ந்தவர்கள் கூட, இப்பொழுது ஒரளவு மாறி இருக்கிறார்கள் என்று தெரிகிறது.

முன்னாலே ஆட்சியில் இருந்தவர்களுக்கும் இப்பொழுது ஆட்சியில் இருப்பவர்களுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான். முன்பு இருந்தவர்கள் யார் எதைச் சொன்னாலும் கேட்கமாட்டார்கள். "எல்லாம் எங்களுக்குத் தெரியும். யாரும் எங்களுக்குச் சொல்ல வேண்டாம்” என்பார்கள் ஆனால், நாங்கள் அப்படியல்ல. எல்லோருடைய கருத்துக்களையும் கேட்டுக் கொள்வோம்.