பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23


கடந்த ஆண்டு" அந்தக் குழுக் கூட்டத்தில் ' பெடரேஷன்' என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையான சொல்லைக் கண்டுபிடிப்பதில் மூன்று நாட்கள் செலவிட்டார்கள். கண்டுபிடிக்குஞ் சொல் அகில இந்திய அடிப்படையில் இருக்க வேண்டும் என்பதில்தான் சிக்கல் இருந்தது.

தமிழ்நாட்டுப் பிரதிநிதி தமிழில் 'சங்கம்’ என்னுஞ் சொல் இருக்கிறது அதைப் பயன்படுத்தலாம் என்றார்.

இதைக்கேட்ட வங்காளப் பிரதிநிதி "வங்கத்தில் சங்கம் என்பதற்கு வேறுபொருள் உண்டு. இதைக் கேட்டவுடன் எங்கள் மாநிலத்தில் வேறு பொருள் கொள்வார்கள். வேண்டாம்”, என்றார்.

உடனே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், 'கழகம்’ என்னுஞ் சொல் தமிழில் இருக்கிறது. அதைப் பயன்படுத்தலாம் ” என்றார்கள்,

" என்ன? கழகமா ?” என்று ஒரு சேர எல்லோரும்.கேட்டார்கள்.

நமது பிரதிநிதிகள், "கழகம்” என்பது 20 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட சொல் அல்ல. தமிழ்ப் புராணங்களில் உள்ள சொல்லாகும்.’’ என்று தெரிவித்தார்கள்.

இவர்கள் எதைச் சொல்லியும் அங்குள்ளவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. கடைசியில் சங்கம்’ என்னுஞ் சொல்லையே ஏற்றுக் கொண்டார்கள். இப்பொழுது அனைத்திந்திய அகராதியில் பெடரேஷன், என்னுஞ் சொல்லுக்குச் சங்கம் என்னுஞ் சொல் தான் தரப்பட்டுள்ளது. மொழி பெயர்ப்பில்கூட ஒரு விதமான மனப்பான்மை காட்டப்படுகிறது.