பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8. ரிசர்வ் வங்கியின் சிந்தனைக்கு இந்த நாட்டில் நாணயத்தின் மதிப்பைக் குறைத்தபோது யாரிடமும் அரசினர் கலந்து பேசவில்லை. அவசர அவசரமாக அந்தத் திட்டத்தை நிறைவேற்றினார்கள். அவசியம் இல்லாமல் அந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தார்கள். 'அந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தவர் யார்?' என்றால் 'நான் இல்லை', 'நீ இல்லை' என்று சொல்லுகின்றார்கள். நாணயக் குறைப்புத் திட்டம் செயல் முறைக்கு உகந்ததும் அல்ல, விரும்பத்தக்கதுமல்ல. எனது குரலுக்கு மத்திய அரசு வட்டாரத்தில் வலுவு இருக்கிறது என்றார்கள்; உங்களின் ஆதரவும் பக்கபலமும் இருந்தால்தான் என் குரலுக்கு மதிப்பும், வலிவும் என்று சொல்லிக் கொள்கிறேன். தொழிலின் அடிப்படையில் தரப்படும் திட்டங்களை ஆய்ந்து பார்த்து இத்தனைக் கோடி ரூபாய் கொடுக்கின்றோமே, இதைப் பயன்படுத்தினால் தொழில் வளர்ச்சிக்குப் பயன் ஏற்படுமா? கொடுத்த பணம் திரும்பக் கிடைக்குமா? என்று சிந்தித்துப் பார்த்து ரிசர்வ் வங்கி கடன் தருவதில்லை; கடன் கேட்பவரின் முகத்தைப் பார்க்கின்றார்கள்.