பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

திறந்துவைக்கப்பட்ட காமராசர் உருவப்படத்தையே பரிசாக அளிக்கிறேன். தமிழ் நாட்டின் தரத்தை உயர்த்தப்பாடுபட்டவர், தமிழர்களின் முன்னேற்றத் திற்காக முயற்சி செய்தவர் என்னும் வகையில் அவரைப் பாராட்டக் கடமை பட்டிருக்கிறேன். பண்பாடு உடைய ஒருவரைப் பாராட்டுவது, பாராட்டுதலுக்குரிய ஒருவரைப் பாராட்டிப் புகழ்வது தமிழ்ப் பண்பாடாகும்; அப்படிப் பாராட்டுவது, மக்களாட்சி நாட்டில் முறையாகும்.

மக்களாட்சி நாட்டில், ஒரு கட்சித் தலைவரை இன்னொரு கட்சித் தலைவர் பாராட்டுவார். அவருடைய படத்தைத் திறந்து வைப்பார். ஆனால், சர்வாதிகார நாட்டில், ஒரு தலைவரின் சமாதியை இன்னொரு தலைவர் கட்டிமுடிப்பார் ! காமராசர் ஒரு கட்சியைச் சேர்ந்தவர்; நான் வேறு ஒரு கட்சியைச் சேர்ந்தவன் ; இந்தப் படத்தைத் திறப்பதாலோ, காமராசரைப் புகழ்ந்து பேசுவதாலோ அவரது வழியிலே நான் நடக்கவேண்டும்; அவர் கொள்கையை நான் பின்பற்றவேண்டும் என்பதல்ல !

அரசியலில் கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால், கசப்புணர்ச்சியை வளர்க்கக் கூடாது ! கருத்து வேறுபாடு எழலாம், அது கத்திக்குத்துகளில் வந்து நிற்கக்கூடாது ! கருத்து வேறுபாடு தேவை என்பதாலே சந்துகளில் நின்று கத்திக்கொண்டு திரிய வேண்டும் என்பதல்ல ! அரசியலில் கட்சி வேறுபாடு கருதிப் பொது வாழ்க்கையில் ஈடுபட்டுப் பாராட்டுதற்குரிய தொண்டாற்றிய ஒருவரைச்