பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21 தமிழின் உலகளாவிய தன்மை



நாளை முதல் உலகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் தமிழ் பற்றி உலகத்தமிழ் மாநாட்டில் ஆராய்ச்சி நடத்த விருக்கிறார்கள்.

மிகுந்த பண்பாளரும் சமநிலை நோக்குள்ளவரும் வித்தகரும் கல்வித்துறையில் புதுமை கண்ட வருமான குடியரசுத் தலைவர் ஜாகீர் உசேன் அவர்கள் இந்த மாநாட்டைத் துவக்கி வைக்க வந்துள்ளார்கள். நல்ல வேளையாக நமது குடியரசுத்தலைவர்களாகத் தொடர்ந்து கற்றறிவாளர்களும் கலாச்சாரத்துறையில் தொடர்பு கொண்டவர்களும் இருந்து வருகிறார்கள்.

கற்றறிந்த மேதையான டாக்டர் இராதா கிருஷ்ணன் முதலில் குடியரசுத் தலைவராய் இருந்தார். அவரைப்போன்ற கல்விமானான ஜாகீர்உசேன் இப்பொழுது குடியரசுத் தலைவராகியிருக்கிறார். அத்தகையவர் உலகத்தமிழ் மாநாட்டைத் துவக்குவது நமக்குப்பெருமை தரத்தக்கது.

இந்த உலகத்தமிழ் மாநாடு முதலில் மலேசியாவில் நடைபெற்றது. இப்போது சென்னைத் திருநகரில் நடைபெறுகிறது. இங்குப் பேசிய காமராசர், முதல் மாநாட்டையே நாம் நடத்தியிருக்க வேண்டும், ஆனால், என்ன காரணத்தினாலோ அவர்கள் முந்திக் கொண்டார்கள் என்றார்கள்.

F-11