பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/149

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தி. க : ஆனால், திருந்தவில்லை......!

தி. மு. க : அறிக்கை யாரையும் திருத்துவதற்காக எழுதப்பட்டதாகவே எனக்குப் படவில்லை. திருப்திப் படுத்த, எழுதப்பட்டதாகத் தெரிகிறது; திருப்தி பெறவும் எழுதி இருக்கிறார் போல் தோன்றுகிறது.

தி. க : வக்கணை பேசுவாய், வேறென்ன தெரியும் உனக்கு. சரி திருத்தவோ, திருப்திப் படுத்தவோ, எதற்கோ எழுதினார்; கிடக்கட்டும்; அதற்குப் பதில் என்ன சொல்லப் போகிறாய்?

தி. மு. க : யார்? நானா? காமராஜர் அல்லவா, பதில் சொல்ல வேண்டும் போலிருக்கிறது, அறிக்கையைப் பார்த்தால்.

தி. க  : உன்னோடு பேசுவதும், வீண். கொஞ்ச நஞ்சம், சந்தேகம் கொண்டோருக்கும், அந்த அறிக்கை, தெளிவு தருகிறது. காமராஜரிடம் நாம் ஆதரவு காட்டுவதால், நமக்குத்தான், திராவிடருக்குத்தான் இலாபம், தெளிவாகத் தெரிகிறது.

தி. மு. க : அறிக்கை அவ்விதம் தான் இருக்கிறது.......

தி. க : காமராஜரிடம் பேசின நமது தோழர்களெல்லாம், பெரியார், சொல்கிறபடிதான், பெருமையாக, சந்தோஷத்துடன் சொந்தம் கொண்டாடிக்கொண்டு, புகழ்ச்சியாகச் சொல்கிறார்கள் தெரியுமா?

தி. மு. க : உனக்கு அந்தப் பாக்யம் கிடைத்ததில்லை போலும்.....

தி. க : இந்தக் கிண்டல் பேச்சு வேண்டாம்...தெரிகிறதா...

தி. மு. க: சரி, உனக்குக் கோபம் குறையட்டும்—நான் வருகிறேன்—அதோ, காங்கிரஸ் ஊழியர் காத்தமுத்து வருகிறார்.

[காங்கிரஸ் ஊழியர் காத்தமுத்து வருகிறார். புதிய கதர்ச்சட்டை துல்லியமாகத் தெரிகிறது. தி. க..., தி. மு. க. இருவரும் ஒன்றாக இருக்கக் கண்டு, இருவருக்கும் வணக்கம் செய்கிறார்.]

தி. க : காத்தமுத்துவா? வா, வா என்ன நீ இந்தச் சதிகாரக் கும்பலுடன் கூடிக்கொண்டதாகக் கேள்விப்பட்டேன்.....

காத்தமுத்து: என்னய்யா, துப்பறியும் இலாகா போல இருக்கிறது பேச்சு.....என்ன சொல்கிறீர்

146