பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/158

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இப்ப, தமிழ் மகன், தடியாலே அடிச்சாலும், ஜெயிலிலே போட்டாலும், நான் அவர் பேரிலே கோபம் கொள்ளவே மாட்டேன். அது அவரோட கடமை...என்றல்லவா பேசறாரு...பார்க்கறயேல்லோ அவங்க பேப்பர்லே...

ஊழி: ஆமாமாம். நம்ம பத்திரிகைகள் போட மறந்துட்டாகூட, இப்ப நம்ம சேதியை அவங்கதான் வெளியிடறாங்க...ஒண்ணாயிடணும்னுகூட யாரோ, அவங்க ஆசாமி பேசினாருன்னு, பார்த்தேன்...

காம: ஆமாமாம்...இரண்டொரு உத்யோகம்...இதனாலே, நமக்கு, கட்சி என்கிற முறையிலே, எவ்வளவு பெரிய இலாபம்னு கவனிச்சயா...எத்தனை விதமான இலாபம்...

ஊழி: ஓட்டு, நமக்குத்தான் போடணும்னு...

காம: அடிச்சிப் பேசறாங்கய்யா...இன்னும், நாம், எலக்க்ஷன் பிரசார கூட்டம் போடவே இல்லை; நம்ம வேலையை அவங்க ஆரம்பச்சி 'ஜரூரா' செய்துகிட்டு, வாராங்க, ஊரூரா...

ஊழி: காங்கிரசுன்னா, வேப்பங்காயா இருக்கும்...எரிஞ்சு எரிஞ்சு விழுவாங்க, அவங்க...

காம: ஆகுமா...அது முன்னே!...இப்ப, எல்லாம்...சரியாகுது...கசப்பு மருந்து தேனிலே குழைச்சி சாப்பிடுவது இல்லையா...அது போலன்னு வைச்சிக்கய்யே... 'ஓட்டு' வாங்கித் தர, அவங்களோட தயவை, நான் ஒண்ணும் கேட்கல்லே...தானா வருகிற சீதேவியை வேணாம்னு சொல்றதா? கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிச்சுகிட்டு வந்து கொடுக்கும் என்பாங்களே, அது போல! இதைத்தானே, இராஜதந்திரம்னு சொல்லணும்...

ஊழி: ஆமா, பெரியவரோட கட்சி ஆசாமிக, இதை எல்லாம் அலசிப் பார்க்கமாட்டாங்களா...

காம: நேரம் ஏது? ஏன்யா, அவரு என்ன சாமான்யப் பட்டவரா...காமராஜர் சங்கதி கிடக்கட்டும், இராமன் சமாசாரத்தைப் பார்க்கலாம் வாங்கன்னு அழைச்சிகிட்டுப் போயிட்டாரே...இப்ப, அவங்களோட கவனம், மெட்ராசிலேயா இருக்குது....அயோத்தியா பட்டணம் போயாச்சி...

ஊழி: ஒரு விதத்திலே, அது நமக்குச் சௌகரியமாப் போச்சு...

155