பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/189

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



காட்சி 2

இடம்:—வேதாசல முதலியார் வீடு.
இருப்போர்:—சரசா, அமிர்தம், மூர்த்தி.
[அமிர்தம் போகிறபோது, சரசா எதிரே வருகிறாள்.]

சரசா : என்னடி ஓட்டமும் ஒய்யாரமும்.

அமிர்தம்: ஒன்றுமில்லேம்மா எஜமான்....

சரசா: இப்படி புள்ளிமான் போல் துள்ளிக்கிட்டு வரச் சொன்னாரா?......

அமிர்தம்: இல்லை. உங்களை கூப்பிட்டு வரச் சொன்னாரு.

சரசா : இதுக்குத்தானா இவ்வளவு கும்மலாட்டம். அமிர்தம் நானுந்தான் பார்த்துக்கிட்டே வர்ரேன். ஒரு வேலைக்காரிக்கு வேண்டிய அடக்கம், ஒடுக்கம், மட்டு மரியாதை ஒன்றுமே உன்கிட்டே கிடையாது.

[சரசா சகோதரன் மூர்த்தி வருகிறான்.]

மூர்த்தி: சரசா, எப்போ பார்த்தாலும் எரிஞ்சி எரிஞ்சி விழுகிறேயே. கொஞ்சம் சாந்தமாகத்தான் பேசேன்.

சரசா: ஆமா, நான் எரிஞ்சி விழுறேன். அதை அணைக்கிறதுக்கு இவர் வந்துட்டார் பயர் இன்சின் (Fire Engine) மூர்த்தி சம்பந்தம் இல்லாத விஷயத்தில் நீ தலையிடாதே.

[சரசா போகிறாள்.]

மூர்த்தி: அமிர்தம் இதையெல்லாம் மனசிலே போட்டுக் கொள்ளாதே. போய் வேலையைக் கவனி. உம்.......

காட்சி 3

இடம்:—வேதாசல முதலியார் வீடு.
இருப்போர்:—சரசா, வேதாசல முதலியார், சொக்கன்.

சரசா: அப்பா கூப்பிட்டிங்களாமே!

வே: ஆமாம் அம்மா, நீ, தர்மத்துக்கும் பண்டுக்கும் ஆடறது சரி. நம்ப பணம் பாழாகாமல் பார்த்துக்கோ, நீ, ஏதோ மாதர் சங்கத்திலே என்னமோ டான்ஸாமே.

186