பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/190

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சரசா: ஆமாப்பா.

வே: இந்த டிரஸ்க்கெல்லாம் வேண்டிய பணம்?

சரசா: சங்கத்திலே வாங்கிப் போடுறேனப்பா!

வே: ஆமம்மா, சொக்கா, எவ்வளவு பில் ஆவுது பணம்.

சொ: அது இருக்குங்க, 300 ரூபாய்க்கு மேலே.

வே: அதென்னடா மேலேயும், கீழேயும். கரைக்டா சொல்லுடா கழுதை!

சொ: 300 ரூபாயும், 32 அணாவும் ஆகுதுங்க.

வே: அதை வாங்கி கொடுத்து விடம்மா சங்கத்திலே.

சரசா: ஆகட்டுமப்பா.

வே: சரசா, காப்பிச் செலவு, வண்டிச் சிலவு அது இதுயென்றுகூட ஆகியிருக்கும் எல்லாம் சேர்த்து, 400 ரூபாயாக வாங்கி கொடுத்து விடு.

சரசா : சரியப்பா. அப்படியே வாங்கிப்பெடரம்பா!

சொ: அம்மா இன்றைக்கு கிடைக்கிறது சந்தேகம் என்று அந்த தையற்காரன் இழுத்தாற்போல சொன்னான். அதனாலே அவனுக்கு ஒரு பத்து ரூபாயைக் கொடுத்து தனியாக கவனிச்சேன். அதையும்......

சர: பதினைந்தாக வாங்கிக்கொள் சொக்கா.

[சரசா போகிறாள்.]

வே: சொக்கா, வந்துதாடா புத்தி?

சொ: என்னங்க?

வே: வந்ததாடா புத்தி என்று கேட்டேன். இவ்வளவு கஷ்டப்பட்டு பணம் சேர்க்கிறேனே, அதைப் பற்றி உனக்கு கொஞ்சமாவது அக்கரை இருக்குதாடா.

சொ: பண விஷயமுன்னா நான் லேசிலே விடறதில்லீங்க.

வே: பேச்சுக்கு குறைச்சலில்லடா உன் கிட்டே, பணம் கொடுத்து பத்து மாசம் ஆகுதே. அந்த சுந்தரம் பிள்ளை தர வேண்டிய பாக்கி என்னாச்சு?

சொ: பணம் வர வழியைக் காணுமுங்க, அதனாலே அரஸ்ட்டுக்கு ஏற்பாடு பண்ணிவிட்டேனுங்க.

187