பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/206

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முரு: அமிர்தம்—அமிர்தம்.

முத்தாயி: அது ரொம்ப கூச்சப்படுதுங்க. மூலையை விட்டு கிளம்ப மாட்டேங்குது.

முரு: சிருசுதானே; எல்லாம் போகப் போக சரியாப் போய் விடும். முத்தாயி, நீ சாப்பாட்டுக்கு வேண்டியதெல்லாம் கவனி, நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வர்ரேன்.

மா. தம்பி: பாக்கியம், நானும் வெளியே போயிட்டு வர்ராப்போல வர்ரேன்; நீயும் பெண்ணை கூப்பிட்டு பார்க்கிறாப் போல பாரு. அது நல்ல லட்சணமா? குணமா? மணமா?

மா. தங்கை: ஆகட்டும் அண்ணேன். அமிர்தம்.......கண்ணு அமிர்தம் வாம்மா. அவுங்க வேறு யாருமில்லே; கூச்சப் படாதே வாம்மா வா. அடேயப்பா இவ்வளவு கூச்சமா? என்னிக்கு இருந்தாலும் நீ நம்ப வீட்டிலே வாழப் போகிறவள்தானே வாம்மா (முகத்தில் மூடியிருந்த துணியை எடுத்துக் கொண்டு) அடப்பாவி, இதைக் காட்டத்தானா இந்த மனுசன் பறந்து வந்தான் கண்ணைப்பாரு, கோழி முட்டைக் கண்ணு: கோடாலி பல்லு; இதைக் காட்டத்தானா இவ்வளவு பசப்பு.

முத்தாயி: என்னம்மா இங்கே சத்தம்? எங்கே புறப்பட்டுட்டே.

மா. தங்கை: வந்த வேலை ஒரு வகையாய் முடிஞ்சிருச்சு போரேன். பொண்ணு காட்ட வந்துட்டாங்களாம் பொண்ணு உன் விடியா மூஞ்சு பொண்ணை நீயே வைத்துக்கொள்.

முத்தாயி: என்னடி உளர்ரே உன் பாட்டுக்கு.

மா. தங்கை: நானாடி உளர்ரேன்; நீ தாண்டி உளர்ரே.

முத்தாயி: போகுது, போகுது என்று விட்டா மேலே மேலே போறியே நாக்கை உள்ளே வச்சு பேசு.

மா. தங்கை: நாக்கு உள்ளேதான் இருக்கு; உன் மகள் மாதிரி நீண்டுக்கிட்டா இருக்கு?

முத்தாயி: என்னடி சொன்ன என் மகளுக்கு பல் நீண்டுக்கிட்டு இருக்கா? உனக்குத்தாண்டி நீண்டுக்கிட்டு இருக்குது. இவ பவுசுக்கொரு கொண்டை; காலுக்கு வேறே தண்டை; பெண் பார்க்க வந்துட்டாளாம் பெண்ணை...போடி.

[மாப்பிள்ளை தம்பி வருகிறார்.]

204