பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/238

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அமிர்: உங்க புருஷன் தான். இங்கே வந்தார் ஏழைதானே, எது வேண்டுமானாலும் செய்யலாம், கேட்கறதுக்கு யார் இருக்கா, அப்படி என்ன தைரியம்.

சரசா: அடிப் பாவி......? அப்படியா?

அமீர்: அவர் செய்த அக்கிரமங்களுக்கு, பாவிப் பட்டம் எனக்கா?

சரசா: மூடுடி வாயை. தடியாட்டமா இருந்துக்கிட்டு தளுக்கும், மினுக்கும் செய்தா ஆம்பளைக்கு கெட்ட எண்ணம் வராதாடி? சனியனே இந்த வீடு உருப்படனும்னா நீ தொலையணும் மொதல்லே. போடி போ. போய் வேலையைப் பாரு.

பரமா: சரசா! ஒரு மரக் கட்டை அவள். மனச் சாந்தியைக் கலைப்பதற்காக அமிர்தத்துடன் ஒரு மாதிரியாக நடந்து கொண்டேன். வேதனைப் பட்டதில் வெறி பிடித்துவிட்டது அவளுக்கு. நல்ல பிள்ளைகள் வேதாசலத்திற்கு. மகள் ஒரு அகம்பாவி. மகன் ஒரு அப்பாவி.

காட்சி 33

இடம்:—நந்தவனம்.
இருப்போர்:—மூர்த்தி, பரமானந்தன், மணி.

பரமா: மூர்த்தி! உனக்கு ஏன் திடீரென்று என்மீது இவ்வளவு ஆசை. என்றுமில்லாதபடி என்னையும் அழைத்தாய் உலவ. ஆனால் பேசாமலிருக்கின்றாயே!

மூர்த்தி: பரமு, பெண்களிடம் இளித்துக் கிடப்பவனே, பெருமை பேசுபவனே, மிரட்டுபவனே! நான் உன்னை ஒரு பேயனென்று மதிக்கின்றேன்.

பர: குடியன், வெறியன், தடியன், பித்தன், பேடி, காமுகன், கபோதி என்று பல பதங்களுண்டு அகராதியிலே ஓய்வு நேரத்தில் பார்த்து வைக்கவும்.

மூர்த்தி: நேரடியாகவே கேட்கிறேன். அமிர்தத்தை என்னவென்று நினைக்கிறாய்?

235